இறுதிநபித்துவத்தை மறுப்பவர்கள் காட்டும் ஹதீஸ்களும்/நபித்தோழரின் கூற்றுக்களும் விளக்கமும்

 

முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (22)

போலி நபித்துவவாதிகளும் அவர்களை பின்பற்றுவோரும் காட்டும் ஆதாரங்களுக்கு மறுப்பு 4

வாதம் 8: இப்ராஹீம் (எனும் நபியின் கடைசிமகன்) வாழ்ந்தால் ,ஸித்தீக்காவும் நபியாகவும் இருந்திருப்பார். அவர் வாழ்ந்தால் அவரது தாய்மாமன்களான கிப்தியர் விடுதலை பெற்றிருப்பார்கள். ஒரு கிப்தியும் அடியைப்பட்டிருக்க மாட்டார் (இப்னுமாஜா 1511)  இதன்படி நபிகளாருக்கு பின் நபி வர முடியும். அதனாலேயே இப்ராஹீம் வாழ்ந்தால் நபியாயிருப்பார் என்று சொன்னார்கள் என்கிறார்கள் அகமதிகள்

பதில்:

1.முதலில் இந்த ஹதீஸ் பலவீனமானது. இதில் இடம்பெறும் உஸ்மான் இப்னு இப்ராஹீம் என்பவர் பலவீனமானவர்.

2.இதை ஸஹீஹ் என எடுத்துக்கொண்டாலும், நபிகளாருக்கு பின் புது நபி வரமுடியும் என்பதற்கு இது ஆதாரமாகாது. காரணம், இப்ராஹீம் வாழமாட்டார் என்பதை முன்கூட்டியே அல்லாஹ் அறிந்தவனாவான். அதனாலேயே நபிகளாரை காதமுன்நபிய்யீன் (கடைசி நபியாக)  ஆக ஆக்கினான். அதற்கேற்பவே நபிகளார் தனக்குப்பின் நபி இல்லை என்பதை அறிவித்தார்கள். அதாவது நபிகளார் கடைசி நபியாகவே (காதமுன்நபிய்யீனாக)  இருக்கும்வகையில் அவரது மகன் சிறுவயதிலேயே மரணித்துவிட்டார். வாழ்ந்திருந்தால் நபிகளார் கடைசி நபியாக ஆகமாட்டார். நபித்துவம் இப்ராஹீம் மூலமாக தொடர்ந்திருக்கும்.

இது என் சொந்த விளக்கம் அல்ல. இப்னுஅப்பாஸ் (ர) வழியாக தஃப்சீர்களில் பதியப்பட்டுள்ளது:

இப்னு அப்பாஸ் (ர) கூறினார்கள்: இதன் அர்த்தம் "நான் அவர்மூலமாக நபிமார்களை முத்திரையிடவில்லை என்றால், அவருக்கு பிறகு நபியாகும் மகனை ஆக்கியிருப்பேன்" என்பதாகும். அதாஉ வழியாக இப்னு அப்பாஸை தொட்டு அறிவிக்கப்படுவதாவது: அல்லாஹ் அவருக்குப்பிறகு நபியில்லை என்று தீர்ப்பளித்தபோது அவருக்கு பருவமைடையும் எந்த ஆண்பிள்ளையையும் கொடுக்கவில்லை. ( பஙவீயின் (بغوي/ ) மஆலிமுத்தன்ஸீல் 33:40)

https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=13&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1

இப்னு காஸினின் (ابن خازن) லுபாபுத்தஃவீல் 33:40) https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=18&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1

இப்னுல்ஜவ்ஸீயின் ஸாதுல் மஸீர் 33:40) https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=15&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1

"இப்ராஹீம் நபியும் நபியின் மகனுமாக இருக்கிறார்" என்பதும் மிக மிக பலவீனமானதாகும். ஒரு பேச்சுக்கு அதை ஏற்பதாக இருந்தால் கூட,   அவர்  வாழ்ந்தால் நபியாக ஆகுவார் என்ற கருத்தில் தான் எடுக்க முடியும்.    ஆனால் அவர் அதை அடையவில்லை!

3.இப்ராஹீமை பற்றி இப்னுஅபீஅவ்ஃபா(ர) அவர்களின் விளக்கம் இதற்கு தெளிவாக பதில் கொடுக்கிறது:

நான் இப்னு அபீஅவ்ஃபா (ர) அவர்களிடம் ," நீங்கள் நபிகளாரின் மகன் இப்ராஹீமை பார்த்தீர்களா?" என்று கேட்டேன். அதற்கு இப்னுஅபீஅவ்ஃபா (ர) , "அவர் சிறுவயதிலே மரணித்துவிட்டார். முகம்மது நபியிற்கு பிறகு நபி இருப்பார் என்றிருந்தால், இப்ராஹீம் வாழ்ந்திருப்பார். ஆனாலும் நபிகளாருக்கு பின் நபி கிடையாது"-புகாரி 6194

4.நபிகளாருக்கு பின் ஷரீஅத் இல்லாத புது நபி வர முடியுமா? நிச்சயமாக முடியாது. காரணம் பனூஇஸ்ராயீலை நிரவகித்தோர் நபிமார்களாக இருந்தனர் (இவர்கள் ஷரீஅத் இல்லாத நபிமார்களே. மூஸாநபியின் ஷரீஅத்தை பின்பற்றியோர்). ஒரு நபி மரணித்தபோதெல்லாம் இன்னொரு நபி (அவரது இடத்திற்கு) கலீஃபாவாக வந்தார்.  எனக்கு பின் நபி இல்லை. அதிக கலீஃபாக்கள் வருவார்கள் (புகாரி 3455). இதன்படி தனக்கு பின் தன் உம்மத்தை நிர்வகிக்க வெறும் கலீஃபாக்கள் தான் இருப்பர். நபி இருக்க மாட்டார் என தெளிவாக்கிவிட்டார்கள்.

அத்தோடு நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்துவிட்டது. எனக்கு பின் நபியோ ரஸூலோ இல்லை. (திர்மிதீ 2272) என்பதன் மூலம் புதிதாக எவரும் நுபுவ்வத் பெற முடியாது.

5.இமாம் முல்லா அலீ காரியின் விளக்கமும் சிறு குழப்பமும்: மேலே குறிப்பிட்ட ஹதீஸிற்கும் "என்க்கு பின் நபி வருவதாக இருந்தால், அது உமராக தான் இருப்பார்" ஆகிய இரண்டையும் சேர்த்து விளக்கும்போது, "நபி வருவதாக இருந்தால் அவர்கள் ஈஸா,களிர், இல்யாஸ் போன்று நபிகளாரை பின்பற்றுபவர்களாவே இருப்பார் என்றும் அப்போது காதமுன்னநபிய்யீன் என்பதுடன் அவருக்கு பின் அவரது ஷரீஅத்தை மாற்றாதவரும் , அவரது உம்மத்தை சேர்ந்தவரும் வருவது முரணாகாது.இதை "மூஸா வாழ்ந்தால் என்னை பின்பற்றுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை" என்ற ஹதீஸ் வலுப்படுத்துகிறது." என்று விளக்குகிறார். (பார்க்க அல்அஸ்ராருல்மர்ஃபூஅது ஃபில்அஃக்பாரில்மவ்ழூஅதி 292)https://shamela.ws/book/6056/292

முல்லா அவர்களும் நபி வருவார் என்று சொல்லவில்லை. வருவதாக இருந்தால் நபிகளாரை பின்பற்றுபவராக இந்த உம்மத்தை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும் என்றும் உதாரணமாக ஈஸா நபி களிர் நபி இல்யாஸ் நபி போன்றவர்களை போல இருப்பார்கள் என்கிறார் (அதாவது இந்த மூன்று நபிமார்களும் நபிகளாரை பின்பற்றி வாழ்கிறார்கள்/வாழ்வார் என்பதே முல்லா அவர்களின் நம்பிக்கை)

ஆனால் இவ்வாதம் தவறானதாகும். நபிகளார் தனக்கு பின்பு புதிதாக எவரும் நபியாக மாட்டார்கள் என்பதை தான் அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார்கள். மனிதன் என்ற ரீதியில் முல்லா அவர்கள் சிறு தவறை இந்த விசயத்தில் விட்டுள்ளார்கள்.  ஆனாலும் முல்லா அவர்கள் நபிகளாருக்கு பின் நபி வருவார் என்று சொல்லவேயில்லை.. வந்தால் இந்தலிஸ்டில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறார்.

உண்மையில் அப்படி நபி வருவார்கள்  என்று முல்லா அவர்கள் நம்பவில்லை என்பதற்கு அவரது வேறொரு நூலிலே தெளிவாக சொல்லியுள்ளார்:

எங்களுடைய நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுக்குபின் நபித்துவ வாதம் செய்வது ஏகோபித்த முடிவின்படி குஃப்ர் ஆகும். (மினஹுர்ரவ்ளில் அஸ்ஹர் 451) https://archive.org/details/jamia_20161110/page/450/mode/1up

 

ஆகவே நபிகளார் கடைசி நபியாக இருக்கும்பொருட்டு , அவருக்கு பின் நபி வர இருந்த ஒரே வழி அவரது நேரடி மகன் மூலமாக தான் என்பதால், அவர்களில் எவருக்கும் பருவமடைய இறைவன் தீர்மானிக்கவில்லை. அல்லது நபியிற்கு பருவமடையும் மகனை அவன் தீர்மானிக்கவில்லை என்பதால் நபிகளாரையே காதமுன்நபிய்யீனாகவும் அவருக்கு பின் நபி வராதவாறு முத்திரையிட்டான். அத்தோடு நபி வருவதாக இருந்தால் அது உமராக தான் இருப்பார் என்ற நபிமொழியும் நபிகளாருக்கு பின் நபி இல்லை என்பதற்கு தான் வலுச்சேர்க்கிறது. நபிவரமுடியும் என்பதற்கு அல்ல!

முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (23)

போலி நபித்துவவாதிகளும் அவர்களை பின்பற்றுவோரும் காட்டும் ஆதாரங்களுக்கு மறுப்பு 5

வாதம் 9: "ஒரு நபி இருக்காவிட்டால், அபூபக்ரே மனிதர்களில் சிறந்தவர்- (அதாவது ஒரு நபி தோன்றினால் அந்த நபியே சிறந்தவர்) இதன்மூலம் நபி வரமுடியும் என்கின்றனர் அஹமதிகள்

பதில்:

1.முதலில் இந்த ஹதீஸ் இஸ்மாயீல் இப்னு ஸியாத் அல்அய்லீ என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. அவர் மிகவும் மிக மிக பலவீனமானவர் (https://shamela.ws/book/3722/1112).

இஸ்மாயீல் இப்னு ஸியாத் இதை இட்டுக்கட்டவில்லை எனின் அவருக்கு கீழே உள்ளவர்களில் ஏதாவது கோளாரு இருக்க முடியும். ஹதீஸின் அர்த்தம் சரியாக இருந்தாலும். (மீஸானுல்இஃதிதால் 1/231 (https://shamela.ws/book/1692/231#p20))

2.நபிகளார் தன்னை கடைசி நபி என்றும் தனக்கு பின் நபி இல்லை என்றும் போலிநபித்துவம் வாதிக்கும் 30 தஜ்ஜால்கள் தோன்றுவார்கள் என்றும் எச்சரித்துள்ளதோடு (திர்மிதீ 2219,) நுபுவ்வத்தும் ரிசாலத்தும் முடிந்துவிட்டதென்றும் எனக்கு பின் நபியோ ரஸூலோ இல்லை என்றும் (திர்மிதீ 2272) இதுபோன்று பல ஹதீஸ்களில் தனக்கு பின் நபி இல்லை என்று தெளிவு படுத்திவிட்டார்கள்.

3.ஈஸா நபியோ நபிகளாருக்கு முன்பே நுபுவ்வத் பெற்ற நபி ஆவார். அவர் மட்டும் மீண்டும் வருவதால் இது பாதிப்படையாது.

இதை ஒரு பேச்சுக்கு ஏற்பதாயின்,

  அபூபகர் மனிதர்களில் சிறந்தவர். ஆனால் நபி இருந்தாலே தவிர. அதாவது ஈஸா நபி தோன்றும்போது நபிகளாருக்கு அடுத்தபடியாக ஈஸா நபியே சிறந்தவராக இருப்பார். அதன்பின் அபூபக்ர் சிறந்தவராக இருப்பார்.

இதிலே புது நபி வருவதற்கு எந்த சான்றும் இல்லை!!!

வாதம் 10: காதமுன்நபிய்யீன் (நபிமார்களின் முத்திரை) என்று கூறுங்கள். அவருக்குப்பின் நபி இல்லை என்று கூறவேண்டாம்" என்று அன்னை ஆயிஷா (ர) கூறியதாகவும் ஆகவே நபி வரமுடியும் என்கிறார்கள் அகமதிகள்

1.முதலாவது இது தொடர்பு அறுபட்ட செய்தி. காரணம் அன்னை ஆயிஷாவிடமிருந்து முகம்மது இப்னு ஸீரீன் அறிவிப்பதாக இது உள்ளது. அன்னை அவர்களிடம் முகம்மது இப்னு ஸீரீன் எதையும் கேட்டதில்லை.

2.அன்னை ஆயிஷா (ர) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸில்:

நுபுவ்வத்தில் எனக்கு பிறகு முபஷ்ஷிராத்தை தவிர வேறு எதுவும் மீதமில்லை. "முபஷ்ஷிராத்" என்றால் என்ன என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகளார்: "ஒரு மனிதர் காண்கிற அல்லது காட்டப்படுகிற நல்ல கனவாகும்" (முஸ்னத் அஹ்மத் 24977) https://shamela.ws/book/25794/21095#p2

இதிலே நுபுவ்வத்தில் நல்ல கனவு மட்டுமே எஞ்சியுள்ளது என்பது ஸஹீஹாக இருக்க, அன்னை கூறியதாக பலவீனமான அறிவிப்பை எப்படி முற்படுத்த முடியும்?

2.இவர்கள் துர்ருல்மன்ஸூர் தஃப்சீரில் 33:40 இலே குறிப்பிட்ட இந்த செய்தியை குறிப்பிடுகிறார்கள். அதற்கு கீழேயே கடைசி அறிவிப்பாக முகீரா இப்னு சுஉபா (ர) அவர்கள் கூறுவதாக வரும் கூற்றில் "காதமுன்நபிய்யீன் என்று கூறுவது உனக்கு போதுமானது. ஏனெனிறால் ஈஸா நபி வெளிப்படுபவராக இருப்பார் என்று நாம் பேசிக்கொள்வோம். அவர் வெளிப்பட்டால், அவர் நபிகளாருக்கு முன்புள்ளவராகவும் பின்னால் உள்ளவராகவும் இருப்பார்."- இதுவும் பலவீனமானது தான். ஆனாலும் இந்த செய்திக்கு ஸஹீஹான ஹதீஸ்களில் ஆதாரமுண்டு.

3.ஸஹீஹான ஹதீஸ்களில் ஈஸா நபி வருவார் என்றும் அவர் இந்த உம்மத்தின் இமாமை பின்பற்றி தொழுவார் என்றும் வானவர்களின் இறக்கைகளில் கைவைத்தவராக இறங்குவார் என்றும் (முஸ்லிம் 246-247 (155f, 156), 5629 (2937a) தெளிவான ஹதீஸ்கள் இருப்பதால், இதை மனதில் வைத்தே முகம்மது நபியிற்கு பின் நபி இல்லை என்று கூறவேண்டாம் என்று சொன்னதாக எடுக்கலாம்.

4.ஆனாலும் மிகவும் சரியான புரிதல்,  நபிகளாருக்கு பின் நபி இல்லை என்பதையும் நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்துவிட்டதாகவும் நபியோ ரஸூலோ தனக்கு பின் இல்லை என்பதாகவும் (திர்மிதீ 2219,2272, புகாரி 3455,3535, 3609) என நபிகளார் தெளிவாக கூறியுள்ளதால், நபிகளாருக்கு பின்பு எந்த நபியும் இல்லை. அதாவது எவரும் புதிதாக நுபுவ்வத் பெற மாட்டார்கள். ஆனால் ஈஸா நபியோ முன்பே நுபுவ்வத் பெற்றவரும், இந்த உம்மத்தை சேர்ந்து நபிகளாரின் ஷரீஅத்படி நடப்பவராகவும் இருப்பதால், நபிகளாருக்கு பின் நபியில்லை என்பதில் எந்த முரணும் இல்லை! காரணம் அவர் பின்னால் நுபுவ்வத் பெறுபவரல்ல... மாறாக ஆயுள் நீடிக்கப்பட்டவர்.

ஆக இந்த செய்தியை ஒருபேச்சுக்கு உண்மை என எடுத்தாலும் , ஸஹீஹான ஹதீஸ்களையும் சேர்த்து பார்க்கும்போது ஈஸா நபியை மட்டுமே அது குறிக்கிறது. வேறொரு புது நபி அல்ல!

 

முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (24)

போலி நபித்துவவாதிகளும் அவர்களை பின்பற்றுவோரும் காட்டும் ஆதாரங்களுக்கு மறுப்பு 6

வாதம் 11:. "சிறியதந்தையே! மனநிம்மதிகொள்வீராக! நான் காதமுன்நபிய்யீனாக இருப்பது போல நீங்கள் காதமுல்முஹாஜிரீனாக இருக்கிறீர்" என்று சொல்லி காதமுன்நபிய்யீன் என்றால் நபிமார்களின் சிறந்தவர் என விளக்கம் கொடுப்பதாக அகமதிகள் கூறுகிறார்கள

பதில்:

1.முதலில் இந்த செய்திகள் அனைத்தும் பலவீனமானவை. அதிலே இஸ்மாயீல் இப்னு கைஸ் என்பவர் ஹதீஸ்களில் நிராகரிக்கப்பட்டவர் என்கிறார் புகாரி (https://shamela.ws/book/12579/411).

 வேறொரு அறிவிப்பில் இப்னு ஷிஹாபை தொட்டு முர்ஸலாக  இப்னு அஸாகீர் அறிவிக்கிறார். ஆனால் இருவருக்கும் இடையே 450 வருட இடைவெளி உள்ளது. ஆகவே இவை அனைத்துமே பலவீனமானது.

2.ஒரு பேச்சுக்கு இதை உண்மை என எடுத்துக்கொண்டால்,  அப்பாஸ் (ர) அவர்கள் தான் சிறந்த முஹாஜிரா? அல்லது அபூபக்ர்,உமர்,உஸ்மான்,அலீ ஆகியோர் சிறந்தவர்களா?

அப்படியென்றால் ஏன்?, காரணம்: மக்கா வெற்றிக்கு பிறகு ஹிஜ்ரத் (மக்காவிலிருந்து மதீனாவிற்கு) ஹிஜ்ரத் இல்லை (புகாரி 3078,2783,2825).

இதன்படி "சிறிய தந்தையே! உமதிடத்திலேயே இருங்கள். அல்லாஹ் என் மூலமாக நுபுவ்வத்தை முத்திரையிட்டது/முடித்துவைத்தது  போன்று உம்மூலமாக ஹிஜ்ரத் முத்திரையிட்டுவிட்டான்/முடித்துவிட்டான்" (அபூயஃலா 2646, மீஸானுல்இஃதிதால் 1/245) என்ற பலவீனமான அறிவிப்போடு சேர்த்து விளங்கினால், முஹாஜிர்களில் கடைசியானவர் என்பதே இதன் அர்த்தம். சிறந்தவர் என்பதல்ல! ஏனெனில் குர்ஆன் ஹதீஸ் கூறும் முஹாஜிர்கள் (ஸஹாபாக்கள்) என்போர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்தவர்களை மட்டுமே!!

அகராதிகளின்படி ஒரு கூட்டத்தின் காதம் அல்லது காதிம் என்பது அவர்களின் கடைசியானவரை குறிக்கும். (லிஸானுல்அரப் பாகம் 12 பக்கம் 164) https://shamela.ws/book/1687/6080#p20

அதன்படி அப்பாஸ் (ர) அவர்களே மக்காவிலிருந்து சென்ற கடைசி முஹாஜிர். நபிகளார் கடைசி நபி.

வாதம் 12: நபிகளார் அலீ(ர) அவர்களிடம், "நான் நபிமார்களின் முத்திரையாவேன் (காதமுன்நபிய்யீன்). நீர் அவ்லியாக்களின் முத்திரை (காதமுல்அவ்லியா) ஆவீர்" என்று சொன்னார்கள். இதனால் காதம் என்றால் கடைசி அல்ல என்கின்றனர் அஹமதிகள்

பதில்:

1.இதை பதிவு செய்த கதீப் அல்பக்தாதீ ""இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். இது கதைசொல்பவர்களின் வேலையிலுள்ளதாகும். இதை உமர் இப்னு வாஸில் இட்டுக்கட்டியுள்ளார் அல்லது அவர்மீது இட்டுக்கட்டப்பட்டுள்ளது" என்கிறார். (பார்க்க தாரீக் 12/79) https://shamela.ws/book/736/6610#p2

2.இது ஏன் தவறானது என்பதை முகம்மது தாஹிர் அல்ஃபத்தனி அவர்கள் தன் மஜ்மஉல்பிஹார் நூலில் இவ்வாறு விளக்குகிறார்:

"காதமுல் அவ்லியா (அவ்லியாக்களின் முத்திரை) என்ற வாசகம் அடிப்படையில்லாத பொய்யாகும். நிச்சயமாக 'காதமுல்அவ்லியா" என்பவர் மனிதர்களில் எஞ்சியிருக்கும் கடைசி முஃமினாவான். அவர் (அலீ) அவ்லியாக்களிலியே சிறப்பானவர் அல்ல. அவர்களில் மிக சிறப்பானவர் அபூபக்ர் (ர) பின்னர் உமர் (ர) ஆவார்கள்.  இதுவே அஹ்லுஸ்ஸுன்னாவினரின் அகீதாவாகும்.  இதிலே எவரும் மாற்றுக்கருத்து கொள்ளவில்லை. அபூபக்ர் (ர) அவர்களைவிட ஆதாரமில்லாமல் ஒருவரின் மஹ்தியத்தை சிறப்பாக்குபவனைவிட அறிவீனர் யார்?"

(மஜ்மஉல் பிஹார் 5/228) https://shamela.ws/book/13631/2846#p1

ஆக காதமுல்அவ்லியா என அலீ(ர) அவர்களுக்கு கூறுவது அடிப்படையில்லாத முரண்பட்ட வாசகமாகும். உண்மையில் காதமுல்அவ்லியா கடைசி முஃமினாக வாழ்பவரே ஆவார்.

3.ஒரு பேச்சுக்கு இது உண்மைனு வைத்துக்கொண்டால், அதிகபட்சமாக என்ன விளக்கம் கொடுக்க முடியும்?  நபிமார்களிடம் விலாயத் பெற்றவர்களில் கடைசியானவர் (அதாவது கடைசி நபியிடம் விலாயத் பெற்றவர்) என்பதை மட்டுமே எடுக்க முடியும்.-இது அஹ்லுஸ்ஸுன்னாவின் நம்பிக்கையல்ல.

4.காதமுல்அவ்ஸியா (வஸிய்யத் செய்யப்பட்டவர்களின் முத்திரை) என்று சீஆக்கள் அலீ(ர) அவர்களை குறிப்பிடுகிறார்கள். அதையும் உண்மை என்று வைத்தால் கூட, மூஸாவின் வஸீ என்பவர் யூஷஃ பின் நூன் என்ற நபியாவார். அந்த வரிசையில் கடைசி நபியால் வஸிய்யத் செய்யப்பட்டவர் என்பதையே எடுக்க முடியும். ஆனால் அவை சீஆக்களின் கட்டுக்கதைகளேயாகும்.

ஆக காதமுல்அவ்லியா என்பது அவ்லியாக்களில் கடைசியானவரே. காரணம்,

அரபு மொழியில் ஒரு கூட்டத்தின் காதம் அல்லது காதிம் என்பது அவர்களின் கடைசியானவரை குறிக்கும். (லிஸானுல்அரப் பாகம் 12 பக்கம் 164) https://shamela.ws/book/1687/6080#p20

வாதம் 13:"உங்களிடையே நபித்துவம் (மறைதூதுத்துவம்) அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பிறகு அல்லாஹ் அதனை உயர்த்திக்கொள்வான். பிறகு நபித்துவத்தின் வழியிலான கிலாஃபத்  ஏற்படும். அதுவும் அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பிறகு அதையும் அல்லாஹ் உயர்த்திக்கொள்வான். அதன்பின் கடித்தொதும்பும் மன்னராட்சி (வாரிசு உரிமை ஆட்சி) ஏற்படும். அதுவும் அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பிறகு அதையும் அல்லாஹ் உயர்த்திக்கொள்வான். பின்னர் கொடுங்கோல் மன்னராட்சி ஏற்படும். அதுவும் அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பிறகு அதையும் அல்லாஹ் உயர்த்திக்கொள்வான். அதற்குப் பிறகு மீண்டும் நபித்துவத்தின் வழியிலான கிலாஃபத் ஏற்படும்."இப்படிக் கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். (முஸ்னத் அஹ்மத்)- இதன்படி கொடுங்கோல் மன்னராட்சிக்கு பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஏற்படும் என்று சொல்லியிருப்பதால், மீண்டும் நுபுவ்வத் ஏற்பட்டு அவருக்கு பின் கிலாஃபத் ஏற்பட வேண்டும் என்கின்றனர் அஹ்மதிகள்

பதில்:

இது மிகவும் அர்த்தமற்ற வாதமாகும்.

1.இந்த ஹதீஸில் முதலாவது நபித்துவ வழியில் கிலாஃபத் ஏற்படுவதற்கு முன்பே நுபுவ்வத்தை அல்லாஹ் உயர்த்திக்கொள்வான் என்று உள்ளது. அதாவது நபி மரணித்ததும் நுபுவ்வத் உயர்த்தப்பட்டுவிட்டது.

2.கிலாஃபத் உயர்த்தப்பட்ட பின் மன்னராட்சியும்,அது உயர்த்தப்பட கொடுங்கோல் மன்னராட்சியும் அது உயர்த்தப்பட நபித்துவ வழியில் கிலாஃபத் ஏற்படும்.  புதிதாக நுபுவ்வத் ஏற்பட்டு அதன்பின் மீண்டும் நுபுவ்வத் உயர்த்தப்பட்டு கிலாஃபத் ஏற்படும் என்று கூறப்படவில்லை! காரணம் முகம்மது நபியின் அதே நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் தான் நிகழும். 

3.முகம்மது நபி, காதமுன்நபிய்யீனாக (நபிமார்களின் முத்திரை) இருக்கிறார். ஒரு கூட்டத்தின் காதிம்,காதம்,கிதாம் என்போர் அவர்களின் இறுதியானவரையே குறிக்கும் என்பதே எல்லா அகராதிகளும் கூறுவதாகும். அதனை விளக்கமாக நபிகளார் "எனக்கு பின் நபியில்லை" என்பதையும் கூறிவிட்டார்கள். (திர்மிதீ 2219)

போலிவாதம் செய்வோருக்கு வேலையே இருக்கிற அர்த்தத்தை மாற்றி வேறு அர்த்தம் கொடுப்பதாகும். அப்படி செய்தால் தான் சமாளிக்க முடியும் என்று அவர்களுக்கு தெரியும்.

ஆனால் நபிகளாரின் கூற்றுகள் இவ்வாறு மாற்றுவிளக்கம் கூற முடியாத வகையிலேயே அமைந்துள்ளது. (அதை ஹதீஸ்களின் கீழே குறிப்பிட்டுள்ளேன்.)

வாதம் 14: " கைஸர் அழிந்துவிட்டால், அவருக்கு பிறகு வேறு கைஸர் கிடையாது. குஸ்ரூ அழிந்துவிட்டால், அவருக்கு பிறகு வேறு குஸ்ரூ கிடையாது" என்பதை போன்றே  முகம்மது நபியிற்கு பின் நபி இல்லை என்பதை புரியவேண்டும் என்கிறார்கள் அகமதிகள்.  ஏனெனில் கைஸர் இறந்த பிறகு 1453 வரை கைஸர்கள் இருந்தனர். அதுபோன்றே முகம்மது நபி தனக்கு பின் நபி இல்லை என்பதையும் புரியவேண்டும் என்கின்றனர்

பதில்:

1.ஹேர்க்யூலிஸ் (ஹிர்கல்) இறந்த போது ரோம பேரரசு விழ ஆரம்பித்துவிட்டது.  ஆக அதே வல்லமையுடன் எந்த கைஸரும் அதன்பின் எழவில்லை. கைஸர் என்று பட்டப்பெயரை தான் இட்டுக்கொண்டனர். இறுதியாக கிபி 1453 இலே முற்றாக இஸ்லாமியரின் கீழ் சென்றது.  ஆனால் குஸ்ரூ உமர் (ர) காலத்தில் முற்றாக வீழ்ந்தனர்.

(குஸ்ரூ நபிகளாரின் கடிதத்தை கிழித்துப்போட்டான். அல்லாஹ் அவனை கிழித்துப்போட்டான். ஆனால் கைஸர் ஹேர்க்யூலிஸ் நபிகளாரின் தூதரையும் அவரது தூதையும் கண்ணியமாக நடத்தினார். அவரது மரணத்தின்பின் உமர் (ர) ஆட்சிக்காலத்தில் புனித பூமியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர்)

2.ஆனால் முகம்மது நபி தனக்கு பின் நபியில்லை என்பது இதுபோன்றது அல்ல. தனக்கு பின் முப்பது பொய்யர்கள் தோன்றி தம்மை நபி என்று வாதிடுவார்கள் என்பதிலேயே தன்னை காதமுன்நபிய்யீன் (அரபியில் ஒரு கூட்டத்தின் காதிம்,காதம்,கிதாம் என்பது அவர்களில் கடைசியானவரை குறுக்கும்) என்று கூறி தனக்கு பின் நபி இல்லை என்கிறார்கள். (திர்மிதீ 2219), அத்தோடு நுபுவ்வதும் ரிஸாலத்தும் முடிந்துவிட்டது என்றும் அதிலே எஞ்சியிருப்பது முபஷ்ஷிராத் எனும் முஸ்லிம்  காணும் நல்ல கனவு மட்டுமே (திர்மிதீ 2272, புகாரி 3609) என்றும், இஸ்ரவேலரை நிர்வகித்ததுபோல நபிமார்கள் வராமல் நபியில்லாத கலீஃபாக்கள் தான் வருவார்கள் (புகாரி 3455) எனும் கருத்துப்படவும்,  அலீ (ர)யிடம் நீங்கள் மூஸாவுக்கு ஹாரூன் இருந்த அந்தஸ்த்தில் என்னிடத்தில் இருக்கிறீர்கள் என கூறி, ஆனாலும் எனக்கு பின் நபியில்லை என தெளிவாக கூறியுள்ளார்கள (முஸ்லிம் 4777,4778). அத்தோடு நபிமார்களை ஒரு கட்டிடத்திற்கு ஒப்பாக கூறி அதின் வைக்கப்படாமல் இருந்த ஒரே கல் நான் தான் என்றும் நானே காதிமுன்நபிய்யீன் (ஒரு கூட்டத்தின் காதம்,காதிம்,கிதாம் என்பது அவர்களின் கடைசியானவர்) அதாவது கடைசி நபியாக இருக்கிறேன் என தெளிவுபடுத்தினார்கள் (புகாரி 3535)

3.இவர்கள் கூறுவது போல புரிவதென்றால், கைஸர் மரணித்த பின் பலவீனமடைந்த மன்னர்கள் வந்தனர். தமக்கு கைஸர்கள் என பெயரிட்டுக்கொண்டனர்.. நபிகளாருக்கு பின் பொய்யர்களான தஜ்ஜால்கள் வருவார்கள். முதலாவது கூட்டத்தாரை நபிகளார் கைஸர்களாக பார்க்காததுபோல, இரண்டாவது கூட்டமான தஜ்ஜால்களை நபிமார்களாக நபிகளார் பார்க்கவில்லை... மாறாக பொய்யர்களாக தான் பார்க்கிறார்கள்.

ஹேர்க்யூலிஸுக்கு பிறகு வந்த மன்னர்கள் தமக்கு கைஸர் என தமக்கு பெயரிட்டுக்கொள்பவராக  இருந்தனர் உண்மையில் அதற்கு தகுதியாக இருக்கவில்லை.. காரணம் அவர்களிடமிருந்த புனிததளங்கள் அமைந்த ஆட்சிப்பகுதி உமர் (ர) ஆட்சிக்காலத்தில் பிடிக்கப்பட்டு அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டனர்.  அதன் பின் உஸ்மானிய கிலாஃபத்தின் போது முற்றாக முகம்மது பின் ஃபாதிஹ் கைப்பற்றி அவரும்  தன்னை கைஸர் அர்ரூம் (கைஸரிர்ரூம்) (ரோமர்களின் கைஸர்/சீசர்) என பெயரிட்டுக்கொண்டார். அதாவது வெறும் பெயரளவான பட்டமே அது.

 அதுபோன்றே பொய்யர்கள் தமக்கு நபி என்றும் ரஸூல் என்றும் நபிகளாருக்கு பின் அந்தஸ்த்தை பெறுவதற்காக வாதிட்டுக்கொண்டனர். உண்மையில் நுபுவ்வத் முடிந்து, நபிகளாருக்கு பின் எந்த நபியுமில்லை! தஜ்ஜால்களே தம்மை நபிமார்கள் என வாதிட்டுக்கொண்டனர்..

 

அதாவது நபிகளாரின் அந்தஸ்த்தான நபி என்பதை பொய்யர்கள் தாமும் தமக்கு அந்தஸ்தாக வாதிட்டு மகிழ்ந்தனர்.( இத்தகையோர் எத்தகைய கறிவேப்பிலைகள் என்பதை *எந்த பயனுமில்லாத (போலி) நபிமார்" எனும் தலைப்பில் எழுதுகிறேன்). ஆனால் உண்மையில்  நபிகளாருக்கு பின் நபியில்லை! அதேபோல்  கைஸர் என்பதும் வெறும் பட்டத்தை தமக்கு மன்னர்கள் போட்டுக்கொண்டனர் அவ்வளவே!

(ஈஸா நபியோ நபிகளாருக்கு முன்பே நுபுவ்வத்தை பெற்றவர். அத்தோடு இந்த உம்மத்தை சேர்ந்தவராக வாழப்போகிறவர். அவர் நபிகளாருக்கு பின்புள்ள நபியாக மாட்டார். காரணம் அவர் முன்புள்ள நபியாவார்.)

 

வாதம் 15: முகம்மது நபியவர்கள் 30 தஜ்ஜால்கள் வருவதாக தான் கூறினார்கள். ஆனால் காழி இயாள் அவர்கள் தன் காலத்திலேயே 30 பொய்யர்கள் வந்துவிட்டனர் என கூறியுள்ளார். ஆகவே மிர்சா காதியானி 30இற்கு பிறகு வந்தவர் என்பதால் உண்மையாளர் என்கின்றனர் அஹ்மதிகள்

பதில்:

*

 1.சாதாரண போலி நபிமார்களின் எண்ணிக்கை 30 என்று சொல்லப்படவில்லை. கத்தாபுகளான (كذابون) தஜ்ஜால்களான 30 பேர் என்றே கூறப்படுகிறது.

 (الدجالون الكذابون-

 தஜ்ஜால்களான பெரும்பொய்யர்கள் அல்லது தஜ்ஜால்கள் அல்லது பெரும்பொய்யர்கள் 30 பேர் வந்து தம்மை நபி/ரஸூல் என வாதிடுவர் )- புகாரி 3609,7121,அபூதாவூத் 4333,திர்மிதீ 2218,2219).

அதாவது மகா பொய்காரர்களான தஜ்ஜால்கள் 30 பேர் தம்மை நபி/ரஸூல் என்று வாதிடுவர் என்பதே இதன் அர்த்தம்.

2.குட்டிக்குட்டி பொய்யர்கள் இந்த 30இற்குள் வரமாட்டார்கள். அவர்கள் தம்மை நபி என வாதிட்டாலும் அவர்களின் தாக்கம் சமூதாயத்தில் இருக்காது.

3.காழி இயாள் காலத்திலேயே 30 பேர் எண்ணிக்கை பூரணமாகியிருந்ததாக காழி கூறுகிறார். ஆனால் மகா பொய்யர்கள் என பார்க்கும்போது அக்காலத்திலே இவ்வெண்ணிக்கை பூரணப்படவில்லை என்பதே சரியானதாகும்.

 

4.இந்த அஹமதி பொய்யர்களின் அளவுகோளின்படி பார்த்தால், மிர்சா காதியானிக்கு சில தசாப்தங்களுக்கு முன் தன்னை நபியென்று வாதிட்ட *பஹாயி* மத தோற்றுனரும், மிர்சாவுக்கு சில தசாப்தங்கள் பின் தன்னை ரஸூல் என வாதிட்ட *ரசாத் கலீஃபாவும்*, தற்போது அன்லிமிடடாக வந்துகொண்டிருக்கும் *முனீர் அஹ்மது அசீம்* போன்ற நபித்துவவாதிகளும்  உண்மையாளர்கள் என அஹமதிகள் நம்ப வேண்டும் அல்லவா? ஆனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். !! *ஆக எல்லாமே இரட்டை வேடம் மட்டுமே.*

 தமக்கு சார்பாக வரும்போது தூக்கிப்படிப்பார்கள். தமக்கு எதிராக வரும்போது புதைத்து விடுவார்கள்.

ஆக தற்காலத்திலும் போலி நபிமார்கள் இருந்துகொண்டே உள்ளனர். இனியும் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். ஆனால்

*அவர்களிலே குழப்பத்தால் மிகப்பெரிய பொய்யர்களும் தஜ்ஜால்களும் 30 பேர் ஆவார்கள்.*

  மிர்சா காதியானியும் அந்த தஜ்ஜால்களில் ஒருவராக இருக்கலாம்.  காரணம் ஐயாவின் பொய்கள் அப்படி. அதாவது சாதாரண புழுகாண்டிகள் போன்று அவர் இல்லை.. புழுகுவதில் ஸ்பெஷலிஸ்ட்

 

இவ்வாறு டிசைன் டிசைனாக அஹ்மதிகள் தம் தோற்றுனரின் தப்பான வாதத்தை நிரூபிப்பதற்காக குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து தம் சொந்த சரக்குகளை விளக்கம் எனும் பெயரில் உருட்டுகிறார்கள்.

அந்த வகையில் ஹதீஸ்கள் மீதும் குர்ஆன் மீதும் உருட்டியதையும் அதற்கான மறுப்பையும் பார்த்தோம்.

இனி மிர்சா குலாம் காதம் பற்றியும் இறுதி நபித்துவம் பற்றியும் என்ன சொல்கிறார் என பார்ப்போம்

Comments