இறுதிநபித்துவத்தை மறுப்பவர்கள் காட்டும் குர்ஆனிய வசனங்களும் விளக்கமும்

 

முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (20)

போலி நபித்துவவாதிகளும் அவர்களை பின்பற்றுவோரும் காட்டும் ஆதாரங்களுக்கு மறுப்பு 1

வாதம் 1.குர்ஆன் 4:69 "யார் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுகிறார்களோ, அவர்கள் அல்லாஹ் அருள்புரிந்தவர்களான நபிமார்கள்  ஸித்தீக்குகள் சுஹதாக்கள் ஸாலிஹீன்கள் உடன் இருப்பார்கள்.இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள்" - இதைவைத்து உலகத்தில் நபிகளாருக்கு கட்டுப்பட்டால் நபியாக ஆகமுடியும் என்று கதைவிடுகிறார்கள்

பதில்:

1.நபி(ஸல்) அவர்கள் நானே கடைசிநபி எனக்கு பின் நபியில்லை. நபித்துவ வாதம்ஸசெய்யும் தஜ்ஜால்களே தோன்றுவர் (திர்மிதி 2219) என்றும் நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்துவிட்டது என்றும் நுபுவ்வத்தில் எஞ்சியிருப்பது முஸ்லிம் காணும் கனவு மட்டுமே (திர்மிதீ 2272) என்றும், பனூஇஸ்ராயீலை நபிமார்கள் நிர்வகித்ததாகவும் ஒரு நபியிற்கு பின் மறு நபி வருவார் என்றிருந்ததாகவும் எனக்கு பின் நபி இல்லை மாறாக கலீஃபாக்கள் தான் வருவார்கள் (புகாரி 3455) என்றும் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

2.குர்ஆன் 4:69 இவ்வுலகத்தில் இருப்பார்கள் என்று சொல்லவில்லை! மாறாக மறுமையிலே அத்தகையோருடன் இருப்பார்கள். இதை நபிகளாரே விளக்கியுள்ளார்கள்:

"எந்தவொரு நபியும் நோய்வாய்ப்படும்போது உலகம்,மறுமை ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பதில்லை." என்று அல்லாஹ்வின் தூதர் சொல்ல கேட்டேன்.

நபி(ஸல்) மரணமடைந்த அந்ந நோயின்போது , அவர்களுக்கு கடுமையான குரல் கரகரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள்

 "مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين"

"அல்லாஹ் அருள்புரிந்தவர்களான நபிமார்கள் ஸித்தீக்குகள் சுஹதாக்கள் ஸாலீஹீன்கள் உடன்"  என்று கூறுவதை செவியுற்றேன். இதிலிருந்து அவர்களுக்கு விருப்பத்தேர்வு வழங்கப்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொண்டேன் என ஆயிஷா (ர) கூறினார்கள் (புகாரி 4586)

இங்கே நபிகளார் மறுமையை தேர்ந்தெடுத்ததை குறிப்பதற்கு இதை கூறினார்கள்.

3.ஸஹாபாக்கள் இதை எப்படி புரிந்தார்கள்?

"நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் இருப்பாய்" என்று நபிகளார் சொன்னபோது அதை கேட்ட நாங்கள் மகிழ்ச்சி அடைந்ததுபோல் இதற்கு முன் ஒருபோதும் மகிழ்ச்சியடைந்ததில்லை.  ஆகவே நான் நபிகளாரையும் அபூபக்ரையும் உமரையும் நேசிக்கிறேன். என் செய்ல்கள் அவர்களுடைய செயல்களை போன்று இல்லாவிட்டாலும், அவர்கள் மீதான என் நேசத்தினால் நான் அவர்களோடு இருப்பேன் என நம்புகிறேன் (புகாரி 3688) அதாவது மறுமையில் இருப்பதையே குறிக்கும்.

அவ்வாறே தூதருக்கு கட்டுப்படுபவர்  நபிமாரின் அளவு நன்மை இல்லாவிட்டாலும் நபிமார்களோடும் இருப்பார்.

4.இந்த வசனம் இறைவனுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டால், இந்த நான்கில் ஒரு பிரிவினரோடு இருப்பார்கள் என்று சொல்லவில்லை. மாறாக அந்த நான்கு பிரிவினரோடும் இருப்பார்கள் என்றே சொல்கிறது.  இவர்கள் சொல்வது போல உலகத்திலிருப்பதை குறிக்கும் எனின்

அப்படிப்பார்த்தால் நபிகளார் மரணித்தபின் ஸஹாபாக்கள், தாபிஊன்கள், அவர்களை பின்தொடர்ந்த அனைத்து முஃமின்களும் எந்த நபியோடு இருந்தார்கள்? எந்த சஹீதோடு இருந்தார்கள் (அவர்கள்தான் கொல்லப்பட்டுவிட்டனரே)? ஆக இது அடிப்படையே குழப்பமான வாதம். ஏனெனில் நபிகளார் தனக்கு பின் நபி இல்லை என்றும் நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்துவிட்டது என்றும் கூறிவிட்டார்கள் (திர்மிதீ 2272, புகாரி 3455,3535)

இங்கே உள்ள 4:69 இலுள்ள *மஅ* என்பது மறுமையில் தோழர்களாக உடன் இருப்பதையே குறிக்கும் என்பதற்கு அவ்வசனத்திலேயே ஆதாரம் உள்ளது

*அவர்கள் தாம் அழகான தோழர்கள்*   என்ற வாசகமே அது.

இத்தகையோரில் ஒருவராக இருப்பார் எனில், அத்தகைய வாசகம் அர்த்தமற்றது.

இரண்டாவதாக நபிகள் நாயகமே இது மறுமையை தான் குறிக்கிறது என்பதை விளக்குவதாக அன்னை ஆயிஷா அவர்களே விளங்கிக்கொண்டார்கள் (புகாரி 4586)

5.அல்லாஹ்வுக்கும் தூதரும் கட்டுப்பட்டவர் ஸாலிஹீன் ஸித்தீக்குகள் சுஹதாக்கள் ஆக முடியாதா? அதுபோன்றே நபியாகவும் முடியும் என்று வாதம் வைத்தால், முஃமின்கள் ஸித்தீக்காகவும் சஹீதாகவும் ஸாலிஹாகவும் முடியும். அவர்கள்  நபிமார்களுடனும் ஏனைய ஸித்தீக்குகள் சுஹதாக்கள் ஸாலிஹீன்கள் போன்றோருடன் சுவர்க்கத்தில் இருப்பார்கள். நபிகளாருக்கு பின் யாரும் நபியாக முடியாது (திர்மிதீ 2219,2272, புகாரி 3455,3535).

6.ராஙிப் அஸ்பஹானீ அவர்களின் விளக்கமும் அபூஹய்யானின் மறுப்பும்:

(இதை குறிப்பிடுவதன் நோக்கம் அஹமதிகள் இமாம் ராஙிபின் விளக்கப்படி 4:69 நபிவர முடியும் என்று வாதம் வைத்ததனால் மட்டுமே. அதுவும் பஹ்ருல் முஹீதிலிருந்து மேற்கோள் காட்டியிருந்தனர். உண்மையில் இந்த விளக்கம் தப்பு என்றே பஹ்ருல்முஹீத் கூறுகிறது.)

அல்லாஹ் அருள்புரிந்தவர்கள் அந்தஸ்தாலும் கூலியாலும் நான்கு வகுப்பினரை சேர்வார்கள். நபியானவர் நபியுடனும் , ஸித்தீகானவர் ஸித்தீக்குடனும், ஷஹீதானவர் ஷஹீதுடனும் ஸாலிஹானவர் ஸாலிஹானவரோடும் இருப்பார். ராஙிப் அவர்கள் "நபிமார்களிலுள்ளவர்கள் (-من النبيين)" என்ற இறைனின் கூற்றை "யார் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்படிகிறாரோ- (ومن يطع الله والرسول)" உடன் இணைப்பதை ஆகுமானதாக கருதுகிறார். அதாவது "நபிமார்களிலிலும் அவர்களுக்கு பின்னுள்ளவர்களிலும் (ஸித்தீக்குகள்,ஷஹீதுகள்,ஸாலீஹுகள்)  யாரெல்லாம் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ, அத்தகையோர் அல்லாஹ் அருள்செய்தவர்களோடு இருப்பார்கள் இது உயர்ந்த சபையாரை குறிக்கிறது. பின் இறைவன் கூறுகிறான் : "இவர்கள் தான் அழகான தோழர்கள்" . இதனை நபிகளார் மரணத்தின்போது கூறிய கூற்று விளக்குகிறது. அதாவது "இறைவா! உயர்வான தோழர்களுடன் என்னை சேர்த்துவிடுவாயாக!"  என்பதாகும். இது வெளிப்படையான உண்மையுமாகும்

இந்த கூற்றை அபூஹய்யான் இவ்வாறு மறுக்கிறார்: அவருடைய இந்த விளக்கம் வெளிப்படையாகவே அர்த்தம்ரீதியாகவும் இலக்கணரீதியாகவும் பிழையானது ஆகும். 

கருத்து ரீதியாக பார்த்தால், இங்கே தூதர் (அர்ரஸூல்) என்பவர் முகம்மது நபியாவார். அதன்படி அல்லாஹ் அறிவிப்பதாவது "யார் அவனுக்கும் அவனது தூதருக்கும் (முகம்மதுநபி) கட்டுப்படுகிறாரோ அவர் (அந்த வசனத்தில் ) குறிப்பிடப்பட்டவர்களோடு இருப்பார்" என்பதாகும்.    "நபிமார்களிலுள்ளவர்கள்" என்பது "எவர் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ" என்பதோடு இணைக்கப்பட்டிருந்தால், அது கட்டுப்படுபவர் யார் என்பதற்கு விளக்கமாக அமையும் (அதாவது நபிமார்களும் ஸித்தீக்குகளும் சுஹதாக்களும் ஸாலீஹுகளும் அல்லாஹ்வுக்கும் முகம்மது நபியிற்கும் கட்டுப்படுபவர்கள் என்பதாக அமையும்).  அவ்வாறாயின் தூதரின் (முகம்மதுநபியின்) காலத்திலோ அல்லது அவருக்கு பிறகோ அவருக்கு கட்டுப்பட்டுநடக்கும் பல நபிமார்கள் இருக்கவேண்டும் என்பதாக அமையும்.  இது சாத்தியமில்லை.  ஏனென்றால் அல்லாஹ் முகம்மது ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களை நபிமார்களின் முத்திரை (கடைசிநபி) என அறிவித்துள்ளான்.  நபிகளாரும் "எனக்குப்பின் நபியில்லை"  என்று கூறியிருக்கிறார்கள்.இலக்கணரீதியாக பார்த்தால் "ஃபாஉல்ஜஸா (ف)வுக்கு முன்புள்ளவை அவ்வெழுத்துக்கு பின்னுள்ளதில் ஆமிலாக இருக்காது.  "(إن تقم هند فعمرو ذاهب ضاحكة)ஹிந்து நின்றாளானால் , அம்ரு சிரித்தவளாக (ضاحكة) செல்வான்" என்று நீ சொன்னால் , அது செல்லுபடியாகாது. (அதாவது சிரித்தவளாக என்பது ஃபாவுக்கு முன்னால் உள்ள ஹிந்து என்ற பெண்ணை குறிக்க முடியாது) (பார்க்க பஹ்ருல் முஹீத் 4:69) https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=19&tSoraNo=4&tAyahNo=69&tDisplay=yes&Page=7&Size=1&LanguageId=1

ஆக ராஙிப் ரஹிமஹுல்லாஹ் பிழையாக சொன்னால், அது அஹமதிகளுக்கு ஆதாரம். ஆனால் அந்த விளக்கம் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் அரபு இலக்கணத்திற்குமே முரணாக உள்ளது.

7.சுவர்க்கத்தில் நபிமார்கள் நபிமார்களுடன் இருப்பார்கள், ஸித்தீக்குகள் ஸித்தீக்குகளோடு இருப்பார்கள், சஹீதுகள் சஹீதுகளோடு இருப்பார்கள், சாலிஹுகள் ஸாலிஹுகளோடு இருப்பார்கள். அதாவது அவர்களுக்கேற்ற தகுதியிலும் உயர் அந்தஸ்திலும் இருப்பார்கள். அப்படியிருப்பின் சாதாரண ஸாலீஹீன்கள் நபிகளாரை மறுமையில் பார்க்க முடியாது போய்விடுமோ என்ற கவலைக்கு மாபெரும் ஆறுதலாக இறைவன் இவ்வசனத்தை இறக்கினான். இது இறங்க காரணமாக சில அன்சாரிகள்/அல்லது சவ்பான் (ர) மறுமையில் நபிகளாரின் அந்தஸ்து காரணமாக எங்களால் காணமுடியாது போய்விடுமோ என்று கவலையை நபிகளாரிடம் வெளிப்படுத்தியபோது இறங்கியதாக அறிவிப்புகள் உள்ளன.

மற்றபடி இவர்கள் கூறுவது போல முகம்மது நபியிற்கு கட்டுப்பட்டால் நபித்துவத்தை அடையலாம் என்பது சொந்த உருட்டு மட்டுமே. அப்படி அடைவதாயின் அபூபக்ர்,உமர்,உஸ்மான், அலீ உட்பட குறிப்பாக நபிகளாரை பார்த்துப்பார்த்து பின்பற்றிய இப்னு உமர் போன்றோரைவிட வேறு யார் தான் அடைய முடியும்? அது சாத்தியமாயின் ஸஹாபாக்கள் தம்மிடையே யுத்தம் செய்தபோது இப்னு உமர் (ர) அவர்களை நபியாக அனுப்பி சமாதானம் செய்துவைத்திருப்பானே?

ஆக குர்ஆனை விளக்கும் தகுதி வழிகேடர்களுக்கு இல்லை!

 

முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (21)

போலி நபித்துவவாதிகளும் அவர்களை பின்பற்றுவோரும் காட்டும் ஆதாரங்களுக்கு மறுப்பு 2

வாதம் 2: குர்ஆன்  7:35 "ஆதமின் பிள்ளைகளே! உங்களிடம் உங்களிலிருந்தே தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால் , அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு, திருந்திக்கொண்டார்களோ, அவர்களுக்கு அச்சமும் இல்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்" என்ற வசனத்தை வைத்து இனியும் நபி வர முடியும் என்கிறார்கள்

பதில்:

1.நபிகளார் தனக்கு பின் நபி இல்லை (திர்மிதீ 2219,2272, புகாரி 3455)  என்று சொல்லிவிட்டதால், இந்த வசனம் நபி இனிமேலும் வரும் என்பதற்கு ஆதாரமாகாது. அத்தோடு குர்ஆன் நபிகளாரை காதமுன்நபிய்யீன் (33:40) என்கிறது.

ஒரு கூட்டத்தின் காதிம்,கிதாம், காதம் என்போர் அக்கூட்டத்தின் கடைசியானோரை குறிக்கும் (லிஸானுல் அரப் 12/164) https://shamela.ws/book/1687/6080#p20

 

2.இந்த வசனம் நிபந்தனை வாக்கியம் ஆகும். அதாவது ரஸூல்மார் வந்தால் தம்மை திருத்திக்கொள்வோருக்கு பயமோ துக்கமோ இல்லை என்பதையே கூறுகிறது. அதாவது முகம்மது நபியிற்கு பின் நபி வருவார் என்றோ ரசூல் வருவார் என்றோ இவ்வசனம் கூறவில்லை. அத்தோடு இது முகம்மது நபி மரணித்த பின்னர் இறங்கிய வசனமும் அல்ல!

3.இந்த வசனம் நபிகளாரின் வருகைக்கு பின்னுள்ள மக்களை குறிக்கவில்லை. மாறாக முழு ஆதமின் பிள்ளைகளிடம் அவர்கள் பூமியிற்கு வருவதற்கு முன்பு அல்லாஹ் கூறியதாகும். இதுவே இமாம் தபரீ போன்றோரின் விளக்கம். இதேபோல "தூதர்களே! தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள். நற்செயல் செய்யுங்கள். நீங்கள் செய்பவற்றை நான் அறிந்தவனாக இருக்கிறேன். (23:51) என்று ரஸூல்மார்களையும் விளித்து பேசுகிறது. இதை வைத்து ஒவ்வொரு நாளும் பூமியில் ரஸூல்மார் இருப்பார்கள் என்று அர்த்தமாகுமா? அல்லது இல்லாத ரஸூலுக்கு சும்மா பேசப்படுகிறது என்று அர்த்தமா? அல்லது ஆதமுடைய சந்ததிகள் முழுவதிலுமுள்ள தூதர்களுக்கு பூமிக்கு வர முன்பு கூறிய உபதேசம் என்று எடுப்பதா?

4.இன்னொரு விளக்கமாக இது நபிகளார் காலத்திலுள்ள ஆதமின் பிள்ளைகளை விளித்து பேசுகிறது.  "தூதர்கள்" என்று பன்மையில் கூறுவது முகம்மது நபி(ஸல்) அவர்களை மட்டுமே.. மகத்துவப்படுத்துவதற்காக அல்லது முந்திய வழிமுறை என்பதால் இவ்வாறு பன்மையில் பாவிக்கப்பட்டுள்ளது. (இதையே இமாம் ராஸீ, இப்னு காஸின், முகாதில் இப்னு ஸுலைமான், இக்ரிமா... போன்ற பலரும் கூறுகிறார்கள்.). இவ்வாறு நூஹ் நபியின் சமூகம் நூஹ் நபியை பொய்ப்படுத்தியதையும், ஆது கூட்டத்தினர் ஹூது நபியை பொய்யப்படுத்தியதையும், ஸமூது கூட்டத்தினர் ஸாலிஹ் நபியை பொய்ப்படுத்தியதையும் ,லூத்து நபியின் சமூகம் லூத் நபியை பொய்ப்படுத்தியதையும் , தோப்புவாசிகள் சுஐப் நபியை பொய்ப்படுத்தியதையும் அல்லாஹ் குறிப்பிடும்போது "தூதர்களை பொய்யாக்கினார்கள்" என்று பன்மையில் தான் கூறியுள்ளான் (குர்ஆன் 26:105,123,141,160,176)

ஏனெனில் முகம்மது நபியே நபிமார்களின் முத்திரையும் (குர்ஆன் 33:40) அவருக்கு பின் நபி இல்லை (திர்மிதீ 2219), அவருக்கு பின் நபிமார்கள் வராமல் நபிமார்அல்லாத கலீஃபாக்கள் தான் வர முடியும் (புகாரி 3455). நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்துவிட்டதால் நபிகளாருக்கு பின் நபியோ ரஸூலோ இல்லை (திர்மிதீ 2272)

5.இமாம் பைளாவீ தூதர்கள் வருவது சாத்தியம் ஆனால் கடமையில்லை என்று சொல்வது நபிகளாருக்கு பின் வருவதை அல்ல.பொதுவாக மனிதர்களுக்கு தூதர்களை அனுப்புவது இறைவன்மீது உள்ள கடமை அல்ல என்பதையே குறிப்பிடுகிறார். அது ஆதமின் பிள்ளைகள்மீதான இறைவனது கருணையின் வெளிப்பாடு. ஏனெனில் பைளாவீ அவர்களே குர்ஆன் 33:40 இற்கு விளக்கம் கூறும்போது:

مع أن المراد منه أنه آخر من نبئ

இதனால் நாடப்படுவது நுபுவ்வத் பெற்றவர்களில் கடைசியானவர் என்பதாகும்.

https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=1&tTafsirNo=6&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&Page=3&Size=1&LanguageId=1 (5வது குறிப்புக்கு காரணம், பைளாவீ முகம்மது நபியிற்கு பின் தூதர் வருவது சாத்தியம் என்று சொல்வதாக அகமதிகள் உருட்டினர்)

ஆனால் நபிகளாரோ தூதை பூரணமாக எத்திவைத்து கருணையை பூர்த்தியாக்கிவிட்டார்கள். அத்தோடு தனக்கு பின் தஜ்ஜால்களான 30 பேர் தோன்றி தம்மை நபி என்று வாதிடுவர் என்றும் நானே நபிமார்களின் முத்திரை. எனக்கு பின் நபி இல்லை என எச்சரித்து எச்சரிப்பையும் பூரணமாக காட்டிவிட்டார்கள் (திர்மிதீ 2219) அத்தோடு அந்த தஜ்ஜால்கள் தம்மை ரஸூலுல்லாஹ் என்றும் வாதிடுவர் (புகாரி 3609) என்பதையும் எத்திவைத்துவிட்டார்கள்.

ஆக இந்த வசனத்தை எவரும் நபிகளாருக்கு பின் ரஸூல் வர முடியும் என்று எந்த ஸலஃபும் புரியவில்லை!

 

முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (21)

போலி நபித்துவவாதிகளும் அவர்களை பின்பற்றுவோரும் காட்டும் ஆதாரங்களுக்கு மறுப்பு 3

வாதம் 3: குர்ஆன் 22:75 "அல்லாஹ் மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுக்கிறான்" இதன் மூலம் இனியும் தூதர்கள் வர முடியும் என்கிறார்கள்

பதில்:

1.இவ்வசனம் எதிர்காலத்திலும் மனிதர்களிலிருந்து தூதர்களை தேர்ந்தெடுப்பான் என சொல்லவில்லை.

2.இறைவன் மனிதர்களையும் மலக்குகளையும் தூதர்களாக தேர்ந்தெடுத்து மனிதர்களுக்கு மனிதர்களையும் அந்த தூதரான மனிதர்களுக்கு மலக்குகளிலிருந்தான தூதரையும் அனுப்புபவனாக இருந்தான்.

3.அதிலே கடைசியான தூதர் முகம்மது நபியாவார். அவர் கூறும்போது,

நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்துவிட்டது. எனக்கு பின் நபியுமில்லை னஸூலுமில்லை. (திர்மிதீ 2272). எனக்கு பின் தம்மை ரஸூல் என்று வாதிடக்கூடிய தஜ்ஜால்கள் தேன்றுவார்கள் (புகாரி 3609) என தெளிவு படுத்திவிட்டார்கள்.

ஆகவே இதுவொன்றும் இனி நபி வருவார் என்பதற்கு ஆதாரமாகாது

வாதம் 4: குர்ஆன் 24:55 "உங்களில் எவர் ஈமான் கொண்டு , நற்செயல் செய்கிறார்களோ  அவர்களை , அவர்களுக்கு முன்னிருந்தவர்களை கலீஃபாக்களாக (ஆட்சியாளர்களாக) ஆக்கியது போன்று, பூமியில் கலீஃபாக்களாக (ஆட்சியாளர்களாக) ஆக்கிவைப்போம்."  முன்பிருந்த மக்களில் நபிமார்கள் நிர்வகித்தார்கள். ஆகவே இதிலும் நபிமார்கள் வரவேண்டும் என்கிறார்கள்

பதில்: இதற்கான விளக்கத்தை நபிகளாரே கொடுத்துள்ளார்கள்:

"பனூஇஸ்ராயீலை (இஸ்ராயீலின்பிள்ளைகளை) நிர்வகிப்போராக நபிமார்கள் இருந்தனர். ஒரு நபி மரணித்த போதெல்லாம்  மற்றொரு நபி அவரைத்தொடர்ந்து (கலீஃபாவாக) வந்தார். எனக்கு பின்னால் நபி இல்லை. கலீஃபாக்கள் தோன்றுவார்கள். " (புகாரி 3455)

குறிப்பாக பனூ இஸ்ராயீலில் மூஸா நபியை தவிர்த்து மற்ற அனைத்து நபிமார்களும் மூஸா நபியின் ஷரீஅத் படி நடந்தவர்களே ஆவர். இதனால் ஷரீஅத் இல்லாத நபிமார் கூட தனக்கு பின் இருக்கமாட்டார்கள் என்பதையே நபிகளார் கூறுகிறார்கள்.

அத்தோடு இஸ்ரவேலரில் ஒரு நபியின் கலீஃபாவாக (அவரது பிரதிநிதி-அவரது இடத்திற்கு வருபவர்) இன்னொரு நபியாக இருந்தார். ஆனால் எனக்கு பின்பு நபி இல்லை. நபியில்லாத கலீஃபாவாக தான் இருப்பார்கள் என துல்லியமாக முன்னறிவித்தார்கள்.

அதனால் எவரும் தன்னை ஷரீஅத் இல்லாத நபி என உருட்டி நபித்துவ வாதம் வைக்க முடியாது. ஆனால் ஈஸா நபியோ நபிகளாருக்கு முன்புள்ள நபி என்பதால், அவர் நபிகளாரின் சரீஅத்படி தீர்ப்பளிக்க (முஸ்லிம் 246-247 (155f-156) வரும்போது இது மீறப்படுவதில்லை!

அதாவது வெறும் கலீஃபா (ஆட்சியாளர்) தான் இருப்பார். நபியாக எவரும் வரமாட்டார்கள்.

வாதம் 5. குர்ஆன் 62:2-3 "அவன் தான் உம்மீகளிடம், அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி அவர்களை பரிசுத்தப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். அவர்களோ இதற்குமுன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர். இவர்களுடன் சேராத ஏனையோரிடத்திலும் . அவன் யாவரையும் மிகைத்தவனும் ஞானமிக்கோனுமாவான்." இதன்படி உம்மீயுன்களிடம் சேராதோரிடத்தில் வேறொரு தூதரை அனுப்புவதாக கூறுவதாக அகமதிகள் உருட்டுகிறார்கள்.

பதில்:

1."وآخرين منهم لما يلحقوا بهم- அவர்களிடம் இன்னும்வந்துசேராத ஏனையோர்" என்று நாம் மொழிபெயர்க்கிறோம். காரணம் இது "في الأميين- உம்மீகளிடத்தில்" என்போதேடே இணைகிறது. அத்தோடு "அனுப்பினான்" என்ற வினைச்சொல் இதிலும் செயற்படுகிறது. இதன்படி "உம்மியீன்களிடமும் அவர்களை  இன்னும் வந்துசேராத ஏனையோரிடமும் ஒரு தூதரை  உம்மீக்களிலிருந்தே அனுப்பினான்" என்பதே இதன் அர்த்தத்தின் தொடர்ச்சி

இதன்படி முகம்மது நபி உம்மீக்களிடமும் அவர்களுடன் வந்துசேராத ஏனையோரான பின்வருவோரிடமும் அனுப்பப்பட்டார் என்பதாகும்.. காரணம் அவர் முழு மனிதர்களுக்கும் தூதராக இருக்கிறார் (குர்ஆன் 7:158, 34:28). அத்தோடு அவர் நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார் (33:40). ஒரு கூட்டத்தின் முத்திரை என்பவர் அவர்களின் கடைசியானவரை குறிக்கும். அதனாலேயே எனக்கு பின் நபி இல்லை என்பதை நபிகளார் விளக்கியுள்ளார் (திர்மிதீ 2219)

2.இதுவல்லாமலும் "وآخرين منهم لما يلحقوا بهم- அவர்களிடம் இன்னும் வந்துசேராத ஏனையோர்்" என்பது "يعلمهم الكتاب والحكمة- அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார்" என்பதிலுள்ள "هم-அவர்களுக்கு" என்பதோடு இணைகிறது. அதன்படி அர்த்தமானது, "அவன் உம்மீகளிடத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். அவர்களோடு இன்னும் சேராத ஏனையோருக்கும் (வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார்.) என்று வரும்.

அதாவது வேதத்தையும் ஞானத்தையும் உம்மீக்களுக்கு கற்பித்தாலும் அவர்கள் வழியாக அவர்களை சேராத ஏனையோருக்கும் சேர்த்தே கற்பிக்கிறார். அதனாலேயே என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் எத்திவைத்துவிடுங்கள் என்கிறார் (புகாரி 3461)

இவைகளே எல்லா தஃப்சீர் ஆசிரியர்களும் புரிந்துகொண்ட விதமும், குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் அரபு இலக்கணத்திற்கும் ஒத்துப்போகும் விதமும் ஆகும்.

3.அகமதிகள் குறிப்பிடுவது போல வரவேண்டுமானால் "وسيبعث من الأخرين  -ஏனையோரிலிருந்தும் அனுப்புவான்" என்று வரவேண்டும். ஆனால் இந்த வசனத்தில் அப்படி எதுவுமில்லை! மாறாக நபிகளார்  தாமே கடைசி நபி என்றும் தனக்கு பின் நபி இல்லை ரஸூல் இல்லை நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்துவிட்டது என்றெல்லாம் தெளிவாக விளக்கினார்கள்.(திர்மிதீ 2272)

4.அவர்களை இன்னும் சேராத ஏனையவர்கள் என்போர் அனைத்து முஸ்லிம்களையும் குறிக்கும். நபிகளார் பாரசீகர்களையும் விசேசித்து இதன்மூலம் குறிப்பிட்டார்கள். (புகாரி 4897) .ஆனால் அவர்களிலிருந்து நபி வருவார் என சொல்லவில்லை. மாறாக தனக்கு பின் நபி இல்லை என்றே சொன்னார்கள். போலி நபிமார்கள் வருவார்கள் போலி ரஸூல்மார்கள் வருவார்கள் என்று எச்சரித்தார்கள் (புகாரி 3609, 7121, திர்மிதீ 2219,2272)

வாதம் 6: குர்ஆன் 3:81 "நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியபோது, 'நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்து,  பின்னர் உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் விசுவாசித்து அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி), நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக்கொண்டீர்களா?' என்று கேட்டதற்கு, அவர்கள் 'நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்' என்று சொன்னார்கள். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் இருக்கிறேன்' என்று கூறினான். " என்ற வசனத்திலுள்ள உடன்படிக்கையை முகம்மது நபியிடமும் எடுக்கப்பட்டது என்று அகமதிகள் கூறி, இதற்கேற்ப நபி வர வேண்டும் என்கிறார்கள்

பதில்:

1.முகம்மது நபியிடம் "உமக்கு பின் உம்மை மெய்ப்பிக்கும் நபி வந்தால், அவரை ஈமான்கொண்டு உதவி செய்ய வேண்டும்" என்று உடன்படிக்கை எடுத்ததாக யாருமே சொல்லவில்லை!

முகம்மது நபியிற்கு முன்புள்ள நபிமார்களிடம் தான் இந்த உடன்படிக்கை எடுக்கப்பட்டது. காரணம், நபிகளார் காதமுன்நபிய்யீன்-நபிமார்களின் முத்திரை. (குர்ஆன் 33:40).(ஒரு கூட்டத்தின் காதம்,காதிம்,கிதாம் என்போர் அவர்களில் கடைசியானவரை குறிக்கும்). அதாவது கடைசியாக இருப்பவரிடம் "உமக்கு பின் நபி வந்தால் அவரை நீர் ஈமான்கொண்டு உதவ வேண்டும்" என்று சொல்லப்படாது. ஆதம் படைக்கப்படுமுன்பே நபிகளார் காதமுன்நபிய்யீனாக இருக்கிறார்.(அஹ்மது 17163)

2.எந்த நபி வந்தாலும் அவருக்கு முகம்மது நபி எதுவுமே செய்ய தேவையில்லை. மாறாக அந்த நபிமார்கள் தான் முகம்மது நபியை மெய்ப்பிக்கவும், உதவவும் ,பின்பற்றவும் வேண்டும்! முகம்மது நபி எந்த காலத்தில் வாழ்ந்தாலும் அவரையே எல்லா நபிமாரும் பின்பற்ற வேண்டும்!

அதை வெளிப்படுத்தும்விதமாக எல்லா நபிமார்களுக்கும் இஸ்ராவுடைய நாளில் முகம்மது (ஸல்) அவர்களே தலைமை தாங்கி தொழுகை நடத்தினார்கள் (முஸ்லிம் 278 (172), நஸாயீ 450)

அதானாலேயே, மூஸா உயிரோடிருந்தாலும் என்னை பின்பற்றுவதை தவிர வேறு வழி அவருக்கு இல்லை (அல்பிதாயா வந்நிஹாயா 2/122). அத்தோடு தவ்ராத்திலும் இன்ஜீலிலும் முகம்மது நபியை குறித்து எழுதியிருப்பதாகவும் (குர்ஆன் 7:157), ஈஸா நபி தனக்கு பின் அஹ்மது எனும் பெயருடைய தூதரை நன்மாராயம் கூறியதாகவும் (குர்ஆன் 61:6),  ஈஸா நபி வரும்போது கூட "உங்களிலிருந்தே  உங்களை வழிநடத்துவார் (முஸ்லிம் 246 (155f))" அதாவது இந்த உம்மத்தீயாக இருந்து நபிகளாரின் ஷரீஆவை நோக்கி வழிநடத்துவார் என கூறப்பட்டுள்ளது.

3.நபிகளாருக்கு அல்லாஹ் மார்க்கத்தை எத்திவைக்குமாறு ஏவினான். அதன்படி நபிகளார் "எனக்குப்பின்  நபி இல்லை (திர்மிதீ 2219) என்றும், நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்து விட்டதாகவும், தனக்கு பின் நபியோ ரஸூலோ இல்லை  (திர்மிதீ 2272) என்றும், இஸ்ரவேலரை நபிமார்கள் நிர்வகித்தது போல என் உம்மத்தில் இருக்காது மாறாக எனக்கு பின் நபியில்லை வெறும் கலீஃபாக்கள் தான் தோன்றுவர் (புகாரி 3455) என்றும், நபிமார்கள் எனும் கட்டிடத்தின் மூலையில் வைக்கப்படாமல் எஞ்சியிருந்த ஒரே கல் நான் தான் என்றும் நானே காதிமுன்நபிய்யீன் <நபிமார்களில் கடைசியானவர்- ஒரு கூட்டத்தின் காதம்/காதிம்/கிதாம் என்பது அவர்களில் கடைசியானோரை குறிக்கும்> (புகாரி 3535) என்றும் தெளிவாக எத்திவைத்துவிட்டார்கள்.

4.எல்லா நபிமார்களுக்கும் உபதேசிக்கப்பட்டது "மார்க்கத்தை நிலைநாட்டுங்கள். பிரிந்துவிட வேண்டாம்" என்பது தான் (குர்ஆன் 42:13). அதாவது தவ்ஹீதை நிலைநாட்டி அதிலே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுவே!

ஆக முகம்மது நபி தான் கடைசி நபி என அல்லாஹ்வும் கூறி நபிகளாரும் கூறி எனக்கு பின் நபி இல்லை என்றும் எந்த காலத்தில் முகம்மது நபி இருந்தாலும் அவரையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றுமே குர்ஆனும் ஹதீஸும் தெளிவுபடுத்துகிறது.

(அஹமதிகள் தம் தந்திரமான வாதங்களால், குர்ஆன் 3:81 எல்லா நபிமார்களையும் குறிக்கும். அதிலே முகம்மது நபியும் உள்ளடங்குவார் என்று வாதிட்டால்,

நம் பதில்: நபிமார்களில் கடைசியாக ஒருவர் இருப்பார் என்று அல்லாஹ்வுக்கு தெரியும் அல்லவா? அத்தகைய கடைசியானவரிடமும் இந்த ஒப்பந்தம் எடுத்தான் என்று தானே உங்களின் வாதத்திலிருந்து வெளிப்படுகிறது. அப்படியாயின், அல்லாஹ் யாரை கடைசி என நியமித்தானோ, அவரிடம் ஒப்பந்தம் எடுத்தாலும் கூட அவருக்கு பின் நபி இருக்கப்போவதில்லை அல்லவா?

அந்த கடைசியான நபிமார் எனும் கட்டிடத்தின் இறுதிக்கல்லும் இறுதி நபியும் (புகாரி 3535) எவருக்கு பின் நபியில்லையோ அந்த நபிமார்களின் முத்திரையுமாகியவர் (திர்மிதீ 2219) முகம்மது நபியே ஆவார்!!

ஆகவே போலி நபித்துவ வாதிகளான நீங்கள் நாண்றுகொள்ளலாம்!!)

வாதம் 7: குர்ஆன் 61:6 "எனக்கு பின் அஹ்மத் எனும் பெயருள்ள தூதர் வருவார் என்று நன்மாரயம் கூறுபவராகவும் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்" என ஈஸா நபி முன்னறிவித்தார். அந்த நபி தான் மிர்சா குலாம் அஹ்மது என்கிறார்கள் அஹ்மதிகள்

பதில்:

1.முகம்மது நபியே இது பற்றி "நான் முகம்மதாக இருக்கிறேன். நான் அஹ்மது ஆக இருக்கிறேன்" -(புகாரி 4896,3532) - அதாவது நான் அஹ்மதாக இருக்கிறேன் என முகம்மது நபி (ஸல்) சொன்ன பின் இவர்களுக்கு உருட்ட  எந்த தகுதியுமில்லை!

2."நான் எனது தந்தை இப்ராஹீமின் பிராத்தனையும், ஈஸாவின் நன்மாராயமுமாக இருக்கிறேன்" (முஸ்தத்ரக் அல்ஹாகிம் 3612, இப்னுஹிப்பான் 6404, தபரானீ 18/252) இதன்மூலம் அந்த அஹ்மது நான் தான் என தெளிவாக்கிவிட்டார்கள்.

3."ஈஸாவுக்கும் எனக்கும் இடையே எந்த நபியுமில்லை" (புகாரி 3442), அத்தோடு "நானே காதமுன்நபிய்யீன். எனக்கு பின் நபி இல்லை (திர்மிதீ 2219).. அதாவது ஈஸா நபி முன்னறிவித்த அஹ்மது நபிகளாருக்கு பிறகு வர முடியாது. நபிகளாருக்கு முன்பும் வர முடியாது.  ஏனெனில் ஈஸா நபிக்கு பின்புள்ள ஒரே நபி முகம்மது நபி மட்டுமே!

4.அடுத்தது ஐயாவின் பெயர் குலாம் அஹ்மது ஆகும். அதாவது அஹ்மதின் சேவகன்/ஊழியன்/அடிமை. அஹ்மதின் அடிமை வருவதாத ஈஸா நபி சொல்லவில்லை! (மிர்சாவின் பெயர் அஹ்மது ஆக இருந்தாலும் அவர் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார். because of 3rd reason)

ஐயா தன் பெயர் குலாம் அஹ்மது தான் என்பதை நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அகமதி முரப்பிகளோ பொய்யாக மிர்சாகுலாம் என்பது குடும்பபெயர் என்றும் அஹ்மது என்பது தான் ஐயாவின் பெயர் என்றும் கதைவிடுவர்.

یعنی جیسے کہ تو بروزی رنگ مین احمد کے نام کا مستحق ہوا- حالانکہ تیرا نام غلام احمد تھا 

உருது வாசகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு:

"அதாவது, நீ புரூஸி தன்மையில் அஹ்மத் என்ற பெயருக்கு தகுதியானவன் ஆனது போல் - உண்மையில் உன் பெயர் குலாம் அஹ்மத் ஆக இருந்த போதிலும்"

ரூஹானிகஸாயின்  20/45, தத்கிரதுஷ்ஷஹாததைன் 43 

https://archive.org/details/RuhaniKhazainVol20_201707/page/n67/mode/1up (68 of 580)

(இங்கே மிர்சா காதியானி தன் பெயர் குலாம் அஹ்மது தான் என்றும் புரூஸ் முறையில் அஹ்மது எனும் பெயருக்கு தகுதியாக ஆகியதாக இறைவன் சொன்னதாக உருட்டியதே இது)

ஆக, வாய்க்கு வந்ததையெல்லாம் குர்ஆனுக்கு விளக்கமாக கூற அகமதிகளுக்கு எந்த தகுதியுமில்லை


Comments