நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.
நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றி அறிவிப்பும் காதியானிகளின் பித்தலாட்டமும்
------------------------------------------------
காதியானிகள் என்போர் மிர்சா குலாம் அஹ்மது காதியானி என்பவரை மஹ்தியாகவும் ஈசா நபியின் இரண்டாம் வருகையாகவும், மர்யமாகவும், கிருஷ்ணராகவும், மைத்ரேய புத்தராகவும் , நபியாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். இவர்கள் தம்மை அஹ்மதிகள் என சொல்லிக்கொள்வார்கள்.
முகம்மது (ஸல) அவர்களின் பின் நபிமாரின் வருகை இருக்காது.. நுபுவ்வதும் ரிசாலத்தும் முற்றுப்பெற்றுவிட்டது என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நம்பிக்கை..
இதை தான் குர்ஆன் 33:40 -
"முகம்மது உங்ளில் (வளர்ந்த) ஆண்கள் எவருக்கும் தந்தையாக இல்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும் காதமுன்னபிய்யீனாகவும் இருக்கிறார்"
என்று சொல்கிறது.
அதாவது காதமுன்னபிய்யீன் என்றால் எவருக்கு பின் நபிமாரின் வருகை இல்லையோ, எவருடைய வருகையின் மூலம் நபிமாரின் வருகை முற்றுப்பெற்று முத்திரை இடப்பட்டதோ அப்படிப்பட்டவரை குறிக்கிறது.
இதை நபிகளார் தெளிவாக கூறியுமுள்ளார்கள்.
நான் காதமுன்னபிய்யீனாக இருக்கிறேன். எனக்கு பின் நபியே இல்லை.
(وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لاَ نَبِيَّ بَعْدِي )
(திர்மிதி 2219)
இங்கே நபிமார்களின் முத்திரை என்பதை விளக்கும்விதமாக எனக்கு பின் நபி இல்லை என்கிறார்கள்.
அதாவது எவருக்கு பின் வேறு நபியோ நுபுவ்வத்தோ இல்லையோ அவரே காதமுன்னபிய்யீன் ஆவார்.
மேலும் நபிகளார் தம்மை கடைசி நபி என தெளிவாக சொல்லியுள்ளார்கள்:
( وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ )
நான் நபிமார்களில் கடைசியானவர் ஆவேன். (காதிமுன்னபிய்யீன்).
(புகாரி 3535)
அரபியில் கா(த்)திம் என்பது கடைசியை குறிக்கும்
அதாவது காதிமுன்னபிய்யீன் என்றால் நபிமார்களில் கடைசியானவர் என அர்த்தம்.
இப்படியெல்லாம் தெளிவான பின்னாலும், நபிகளாருக்கு பின் நபி வருவார்கள் என வாதிட்டு , முகம்மது (ஸல்) அவர்கள் தெரியாமல் சொல்லிவிட்டது போன்று இவர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் தமக்கு சாதகமாக எதுவெல்லாம் தென்படுமோ அவற்றை ஆராயாமல் ஆதாரமாக முன்வைப்பார்கள். அப்படியான ஒரு ஹதீசையும் அவர்களின் வாதத்தையும், அது அறிவற்ற வாதம் என்பதையும் பார்ப்போம்:
காதியானிகளின் வாதம்:
حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عُتَيْبَةَ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ، وَلَوْ عَاشَ لَكَانَ صِدِّيقًا نَبِيًّا، وَلَوْ عَاشَ لَعَتَقَتْ أَخْوَالُهُ الْقِبْطُ، وَمَا اسْتُرِقَّ قِبْطِيٌّ .
ரசூலுல்லாஹ்வின் மகன் இப்ராஹீம் மரணித்தபோது , ரசூலுல்லாஹ் அவருக்காக (ஜனாஸா) தொழுது, "நிச்சயமாக இவருக்கு சுவர்க்கத்தில் பாலூட்டுபவர் உள்ளார். அவர் வாழ்ந்திருந்தால், அவர் ஸித்தீகாகவும் நபியாகவும் இருந்திருப்பார். அவர் வாழ்ந்திருந்தால், அவருடைய கிப்தி தாய்மாமன்களை (அடிமைத்தனத்திலிருந்து) விடுதலை செய்திருப்பார். ஒரு கிப்தியும் அடிமைப்படுத்தபட மாட்டார்." என கூறினார்கள்.
ஆதாரம்: இப்னுமாஜா vol.1, book 6, hadith 1511
நபிகளாருக்கு பின் நபி இல்லை எனின் எப்படி இப்ராஹீமை குறித்து இப்படி சொல்லியிருப்பார்கள்?
நபிகளாருக்கு பின் நபி வர முடியும். அதுவே இந்த ஹதீஸ்கூறுகிறது என இந்த காதியானிகள் சொல்கிறார்கள்.
#முஸ்லிமின்_பதில்:
இவ்வாதம் பச்சை பித்தலாட்டம் ஆகும்.
முதலாவது இந்த ஹதீஸ் பலவீனமான (ழயீஃபான ) ஹதீஸ் ஆகும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் இப்னு உஸ்மான் என்பவர் ஹதீஸ்களில் கைவிடப்பட்ட பலவீனமானவர் ஆகும்.
ஆகவே இதை வாதமாக வைக்கவே முடியாது.
அடுத்து, ஒரு பேச்சுக்காக இதை நாம் ஏற்றுக்கொள்வோம் என வைத்துக்கொண்டாலும், இது காதியானிகளுக்கு ஆதாரமாக அமையாது.
ஏனெனில் இப்ராஹீம் அவர்கள் வாழமாட்டார்கள் என முன்கூட்டியே இறைவனுக்கு தெரியும். அவர் நபியாக அனுப்பபட போவதுமில்லை என்றும் தெரியும். காரணம் அவர் சிறு வயதிலேயே மரணித்துவிடுபவர்.
ஆகவே நபிகளாருக்கு பின் எந்த நபியும் வரமாட்டார்கள். நபிகளாரே கடைசி நபி என அல்லாஹ் குர்ஆனிலும் நபிகளார் தம் ஹதீஸ்களிலும் கூறிவிட்டார்கள்.
நபிகளார் கடைசி நபியாகவே இருப்பார். அதற்கு ஏற்ப இப்ராஹீமும் குழந்தையிலேயே மரணித்துவிட்டார்..
நபிகளாருக்கு பின் ஒரு நபி வரவேண்டும் என இறைவன் விரும்பி இருந்தால், இப்ராஹீமுக்கு நீண்ட ஆயுளை கொடுத்திருப்பான்... ஆகவே இறைவன் நாடியதும் நபிகளார் இறுதி நபியாக இருப்பார் என்பதுவே ஆகும். அதனால் தான் இப்ராஹீம் சிறு வயதிலேயே மரணித்துவிட்டார்.
இது தான் அதிகபட்சமாக அந்த செய்தியிலிருந்து பெறமுடியும். ஆனாலும் இந்த அறிவிப்பு பலவீனமானது ஆகும்.
*இப்ராஹீம் பற்றியும் இறுதி நபித்துவம் பற்றியும் ஸஹாபாக்களின் நிலைப்பாடு என்ன?
நான், இப்னு அபீஅவ்ஃபா (ர) அவர்களிடம், 'தாங்கள் நபி(ஸல்) அவர்களின் புதல்வர் இப்ராஹீம் (ர) அவர்களை பார்த்தீர்களா?' என்று கேட்டேன்.. அதற்கவர்கள், அவர் சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.
முஹம்மது (ஸல்) அவர்களுக்குப்பின்னால் இறைதூதர் (நபி) ஒருவர் இருப்பார் என தீர்மானிக்கப்பட்டிருந்தால், நபி(ஸல்) அவர்களின் புதல்வர் (இப்ராஹீம்) உயிர்வாழ்ந்திருப்பார்.. ஆனால், முகம்மது (ஸல்) அவர்களுக்குப் பின்னால் எந்த இறைதூதரும் (நபியும்) இல்லை.
ஆதாரம் புகாரி 6194.
இவ்வாறு ஸஹாபாக்கள் கூட நபிகளாருக்கு பின் நபி வருவார் என்று விதிக்கப்பட்டிருந்தால், இப்ராஹீம் வாழ்ந்திருப்பார். ஆனாலும் நபிகளாருக்கு பின் நபி இல்லை. அதற்கேற்ப அவரும் சிறுவயதில் மரணித்துவிட்டார் என்பதையே கருதினார்கள். இந்த காதியானிகள் கூறுவது போல அல்ல
ஆகவே.
1.நபிகளாரே காதமுன்னபிய்யீன். (குர்ஆன் 33:40) அதாவது நபிமார்களின் வருகை நபிகளார் மூலம் முத்திரை குத்தப்பட்டுவிட்டது.
2.நான் நபிமார்களின் முத்திரை (காதமுன்னபிய்யீன்.) எனக்கு பின் நபி இல்லை என நபிகளார் கூறிவட்டார்கள். (திர்மிதி 2219)
இங்கே காதமுன்னபிய்யீனை விளக்கும் வாசகமே "எனக்கு பின் நபி இல்லை" என்பதாகும்.
3.நான் காதிமுன்னபிய்யீன்- நபிமார்களில் இறுதியானவர் என நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரி 3535)
4.இப்ராஹீமை பற்றிய அறிவிப்பு இப்ராஹீம் இப்னு உஸ்மான் என பலவீனமான ஹதீஸ்களில் கதகைவிடப்பட்டவர் வழியாகவே வருகிறது.
5.ஒரு பேச்சுக்கு இதை ஏற்றுக்கொண்டாலும், காதியானிகளுக்கு இதில் ஆதாரம் இல்லை.
காரணம் நபிகளாரே கடைசி நபியாக இருக்கும்விதமாக இப்ராஹீம் குழந்தை பருவத்திலேயே மரணித்துவிட்டார்கள்.
6.நபித்தோழர்களின் நிலைப்பாடுகூட, நபிகளாருக்கு பின் எந்த நபியும் இருக்கமாட்டார். அதனால் தான் இப்ராஹீம் சிறுவயதில் மரணித்தார் என்பதாகும்.(புகாரி 6194)
7.இது முஸ்லிம்களின் தெளிவுக்காக:
ஈசா நபி முகம்மது (ஸல்) அவர்களுக்கு முன்னால் உள்ள நபி ஆவார். முன்னரே நுபுவ்வதை பெற்றவர் ஆவார். ஆதலால் அவர் திரும்ப வருவதால் நபிகளார் கடைசியாக நுபுவத்தை பெற்றவர் என்பதிலும் கடைசியாக நபியானவர் என்பதிலும் மாற்றமில்லை.. அதனால் தான் முகம்மது (ஸல்) இறுதி நபி ஆவார்.
------

Comments
Post a Comment