ஈஸா நபி இறுதி மரணத்தை அடையவில்லை -ஆதாரங்கள்

 

பாகம் 2: ஈஸா நபி விஷயம்

 

அஹ்மதிகளின் தலைவரான மிர்சா காதியானி தன்னை நிழல் ரீதியாக புரூஸீ ரீதியாக ஈஸா நபி என்றும் ஒரிஜினல் ஈஸா நபி மரணித்துவிட்டார் என்றும் அவர் திரும்பவும் வரமாட்டார் என்றும்  ஈஸா நபியின் காலத்திலே யூதர்கள் இல்யாஸ் நபி வருவதை எதிர்பார்த்தது போல முஸ்லிம்களும்  ஈஸா நபியின் வருகையை தப்பாக எதிர்பார்க்கிறார்கள்   என்றும் கூறினார்.

இவர் ஈஸாவாக மாறிய கதை அற்புதமான கதை. அதையும் நாம் இடையிலே பார்ப்போம்!

 

1.ஈஸா நபி ஒரு மனிதன் அடையும் இறுதி மரணமாகிய மரணத்தை அடையவில்லை  என்பதற்கான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள்

 

1.01.குர்ஆன் 4:157-159

157.இன்னும், “அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம்என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ்   சபித்துவிட்டான்), அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை.  எனினும், அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவனை ஒப்பாக்கிக் காண்பிக்கப்பட்டது, இன்னும் நிச்சயமாக இவ்விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர்,  வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது, மேலும், உறுதியாக அவர்கள் அவரை கொலை செய்யவே இல்லை.

158.மாறாக, அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான், இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.

159.வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை, இன்னும், மறுமைநாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார். (4:157-159)

இவ்வசனங்களில் யூதர்கள் ஈஸா நபியை கொன்று விட்டோம் என்று சொன்னதற்கு அல்லாஹ் மறுப்பளிக்கிறான்.

அதிலே அவரை கொல்லவும் இல்லை சிலுவையில் அறையும் இல்லை. மாறாக ஒருவர் ஒப்பாக்கப்பட்டார். இதுகுறித்து இப்னு அப்பாஸ் () கூறும்போது, ஈஸா நபியின் தோழர்களில் மிகவும் இளவயது நபர் ஈஸா நபியின் தோற்றத்தைக் பெற்று ஈஸா நபிக்கு பதிலாக உயிர்த்தியாகம் செய்ய முன்வந்ததாகவும், அவரையே சிலுவையில் அறைந்ததாகவும், ஈஸா நபியை வானத்திற்கு உயர்த்திக் கொண்டதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்கள். (பார்க்க இப்னு கஸீர் , குர்ஆன் 4:158 இதற்கான விளக்கம் (அரபு மூலம் : பாகம் 2 பக்கம் 398)

குர்ஆன் வசனம் 4:158 கூறும்போது "மாறாக அல்லாஹ் அவரை தன் பக்கம் உயர்த்திக் கொண்டான்" என்கிறது.  இதுவும் யூதர்களின் வாதமான அவரை கொன்று விட்டோம் என்று கூறியதற்கான மறுப்பின் தொடர்ச்சி ஆகும்.

இங்கே உயர்த்துதலை மூன்று வகையாக பிரித்து பார்ப்போம்:

1.அந்தஸ்த்தை உயர்த்துதல்:

இங்கே இது அந்தஸ்த்தை உயர்த்துவதை குறிக்காது. காரணம் அவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டால் , அது அவருக்கு ஷஹாதத் (உயிர்த்தியாகம்) செய்த அந்தஸ்து கிடைக்கும். அதிலிருந்து காப்பாற்றுவது எப்படி அந்தஸ்தை உயர்த்துவதாக இருக்கும்?    மாறாக குறைப்பதாக தான் இருக்கும். இதை சொல்வதற்கு வல்லமையையும் ஞானத்தையும் இறைவன் குறிப்பிட்டு வசனத்தை முடிப்பானா?   

2.மரணிக்கச்செய்தல்

உயிரை மட்டும் உயர்த்துவதாக (மரணிக்கசெய்வதாக) எடுத்தால் அதுவும் மடமையான கருத்தாகவே அமையும். காரணம் அவரை கொல்லவில்லை என்று சொல்லிவிட்டு உயிரை உயர்த்தினான் என்றால், கொன்றாலும் கொல்லாவிட்டாலும் உயிரை அல்லாஹ் தானே உயர்த்துவான்.  அதனால் கொல்லவில்லை என்பதற்கு சான்றாகவோ நாம் கொன்றோம் என்ற யூத கருத்துக்கு மறுப்பாகவோ இது அமையாது.. காரணம் யூதர்கள் கொன்றாலும் உயிரை அல்லாஹ் தானே உயர்த்துவான்.

3.உடலோடும் உயிரோடும் உயர்த்துதல்

அது உடலோடு உயர்த்திக் கொள்வதை பொருத்தமட்டில், அதுவே மிகவும் துல்லியமான மறுப்பாக அமையும் . அதாவது சிலுவையில் அறையப்பட்டது வேறொருவர் என்பதும் அவர் அறையப்படவில்லை கொல்லப்படவில்லை என்பதும் (4:157) அதன் பின் என்ன நடந்தது என்பதை விளக்கும் விதமாக அவர் உடலோடு உயர்த்தப்பட்டார் என்பதும்(4:158)  இறுதியில் அவரது மரணத்திற்கு முன் இந்த யூதர்கள் அவரை விசுவாசம் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள் என்றும் (4:159) (புகாரி 3448) கூறுவதே அவ்வாறு அமையும்.

இவ்வசனங்கள் ஈஸா நபி மரணிக்க வில்லை என்பதற்கும் வானத்திற்கு உயர்த்தப்பட்டார் என்பதற்கும் சிறந்த ஆதாரம்

*****

1.02.குர்ஆன் 3:54-55

54.மேலும், (ஈஸாவை நிராகரித்த) அவர்கள், (அவரைக் கொலை செய்யச்) சதிசெய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரை இரட்சித்துக்கொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்துவிடும்படி) அல்லாஹ்வும், (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான்.  இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களின் சதியை முறியடித்துக் கூலி கொடுப்பவர்களில் மிகச்சிறந்தவன்.

55.(ஈஸாவை நோக்கி) ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்பவனாகவும் இருக்கிறேன்.  மேலும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மையும் பரிசுத்தப்படுத்துகிறவனாகவும், மேலும் உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்போரை விட மறுமை நாள்வரை மேலாக்கி வைப்பவனாகவும் இருக்கிறேன்பின்னர், உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது.  அப்போது எதில் நீங்கள் மாறுபட்டவர்களாக இருந்தீர்களோ அதில் நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்என்று கூறியதை (நினைவு கூர்வீராக!) (3:54-55)

இவ்வசனங்களில் யூதர்கள் ஈஸா நபியை கொல்வதற்கு சதி செய்தபோது இறைவன் அவர்களது சூழ்ச்சிக்கு பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்டு, ஈஸா நபியை தவஃப்பீ செய்யப்போவதாகவும் அவரை தன்பக்கம் உயர்த்திக்கொள்ள போவதாகவும் அவரிடம் கூறியதாக குறிப்பிடுகிறது. 

இதையும் இரண்டாக பிரித்து பார்க்க முடியும்:

1.மரணிக்க செய்தல்

இது மரணிக்கச்செய்து ரூஹை உயர்த்துவதை குறிப்பதாயின், ஈஸா நபியை எதிரிகளிடம் கொலைசெய்யப்பட கைவிட்டுவிடுவதாக அர்த்தமும் எடுக்கலாம். ஏனெனில் அவர்கள் கொன்றாலும் இறைவனே மரணிக்கச்செய்கிறவன்.  ஆக இதை ஈஸா நபியிடம் சொல்லவே தேவையில்லை. அத்தோடு அல்லாஹ் திட்டம்தீட்டுவதில் சிறந்தவன் என்று எம்மிடம் சொல்லத் தேவையுமில்லை. காரணம்  எதிரிகள் சதிசெய்து கொன்றால் இது தானே நடக்கும்.

அல்லது மரணிக்கச்செய்து அந்தஸ்தை உயர்த்துவதை குறிப்பதாயின், அப்போதும் எதிரிகளிடம் விட்டுவிட்டால் என்ன நடக்குமோ அதுவே இங்கேயும் நடக்கிறது. அதனால் இந்த இரு விளக்கங்களும் அறிவீனமானவை ஆகும்.

2.உடலுடன் உயர்ததுதல்

 உம்மை கைப்பற்றி அல்லது தூங்கவைத்து (தூக்கமும் ஒருவித தற்காலிக மரணமே) வானத்திற்கு உயரத்திக்கொள்வேன் அல்லது உம்மை உயர்த்திக் கொண்டு கடைசி காலத்தில் மரணிக்கச்செய்வேன் என்று கூறுவதாக இருக்குமாயின் மட்டுமே எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கொடுக்கப்படுவதாக அவரிடம் வாக்களிப்பதாகவும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்ததாக எம்மிடம் கூறுவதும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

இப்படியே கஅப் () கூறியுள்ளதோடு இப்னு அப்பாஸ் () அவர்களும் கூறியுள்ளார்கள்:

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை பின்பற்றியவர்கள் குறைவானவர்கள் என்பதையும் தன்னை பொய்ப்படுத்தியோர் அதிகமானவர்கள் என்பதையும் கண்டபோது அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். அப்போது அல்லாஹ் அவருக்கு வஹீயாக "நான் உம்மை தவஃப்பீ செய்கிறவன் ஆகவும் என்பக்கம்  உம்மை உயர்த்திக்கொள்பவனாகவும் இருக்கிறேன். அவரது உயர்த்துதல் என்னிடத்தில் மரணம் எனும் அர்த்தம் அல்ல.  "நான் உம்மை தஜ்ஜாலாகிய ஒற்றைக்கண்ணனிமீது அனுப்புவேன் நீர் அவனை கொல்லுவதற்காக. அதன் பின்னர் 24 வருடங்கள் வாழ்வீர். பிறகு உயிருள்ளவரின் மரணமாக உம்மை மரணிக்க செய்வேன்.. கஅப் கூறினார்: இது "நான்  அதன் ஆரம்பத்திலும் அதன் இறுதியில் ஈஸாவும் இருக்கும் சமூகம் எவ்வாறு அழியும்?" என்ற நபிமொழியை மெய்ப்பிக்கிறது.  (இமாம் ஸுயூத்தியின் துர்ருல் மன்ஸூர் (الدر المنثور)  3/597 (ஸூரதுல் ஆலுஇம்ரான் 3:55 இன் விளக்கம்), தபரீ 7137

இப்னு அப்பாஸ் () அவர்கள் சொன்னதாகவும் அவ்வாறே வருகிறது:

عن ابن عباس في قوله : إني متوفيك ورافعك . يعني رافعك ثم متوفيك في آخر الزمان .

இப்னு அப்பாஸ் () கூறியதாவது: "நான் உம்மை தவஃப்பீ செய்கிறவன் ஆகவும் என்பக்கம் உம்மை உயர்த்திக்கொள்பவனாகவும் இருக்கிறேன" என்பதன் அர்த்தம், உம்மை உயர்த்திக்கொள்பவனாகவும் பின்னர் இறுதி காலத்தில் (மறுமை அடையாளத்தின் பின்) உம்மை தவஃப்பீ செய்கிறவன் ஆகவும் இருக்கிறேன் என்பதாகும. துர்ருல் மன்ஸூர் (الدر المنثور)  3/597 (ஸூரதுல் ஆலுஇம்ரான் 3:55 இன் விளக்கம)

ஆகவே முதலில் உயர்த்திக் கொள்வதும் கடைசி காலத்தில் மரணிக்கச்செய்வதுமே

இவர்கள் அனைவருக்கும் மேலான எம் ஒப்பற்ற தலைவரும் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்:

"அவர் தஜ்ஜாலை அழிப்பார். 40 வருடங்கள் பூமியிலே தங்கியிருப்பார். பிறகு மரணிப்பார். அவருக்காக முஸ்லிம்கள் ஜனாஸா தொழுவார்கள்"-அபூதாவூத் 4324 (ஸஹீஹான ஹதீஸ்)

ஆக இவ்வசனங்களும் ஈஸா நபி உயிருள்ள மனிதன் அடையும் இறுதி மரணத்தை அடையவில்லை என்பதை காட்டுவதோடு உயர்த்தி கொள்ளப்படுவதையே குறிப்பிடுகிறது

*******

1.03.குர்ஆன் 43:61

இன்னும், நிச்சயமாக அவர், (ஈஸா அலைஹிஸ்ஸலாம் ) மறுமை நாளின்  அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம், நீங்கள் என்னையே பின்பற்றுங்கள், இதுவே நேரான வழியாகும் (என்று நபியே! நீர் கூறுவீராக!).(43:61)

இதன் விளக்கம், ஈஸா நபியின் வெளியாகுதல் என்கிறார்கள் இப்னு அப்பாஸ் ()

عن ابن عباس رضي الله عنهما في قوله { وإنه لعلم للساعة } قال: خروج عيسى قبل يوم القيامة.

அவர் மறுமையின் அடையாளம் ஆவார் என்பது மறுமைநாளுக்கு முன்பு ஈஸா நபியின் வெளியாவதை குறிக்கிறத. (இமாம் ஹாகிமின் அல்முஸ்தத்ரக் அலஸ்ஸஹீஹைன் (المستدرك على الصحيحين)   3720 ஸஹீஹானது, முஸ்னத் அஹ்மத் 2918, இப்னு அபீஹாதிமின் தஃப்சீர் 19011, தபரானீ 12/154 (12740))

மறுமையின் பத்து அடையாளங்களில் ஒன்றாக நபிகளார் ஈஸா நபி இறங்குவதை குறிப்பிட்டுள்ளார்கள்.

****

1.04.மறுமையின் பத்து மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாக மர்யமின் மகன் இறங்குவதை நபிகளார் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம் 5558 (2901), அபூதாவூத் 4311,இப்னுமாஜா 4055)

உவமை மர்யத்தின் உவமை மகனான உவமை ஈஸா வருவார் என கூறவில்லை. ஈஸா நபியை தவிர வேறொருவர் வந்தால், காதமுன்நபிய்யீன் என்பதும் எனக்கு பின் நபி இல்லை என்பதும் பொய்ப்பிக்கப்படுவதாக அமையும். ஏனெனில் நபிகளாருக்கு பிறகு எவரும் நுபுவ்வத் பெற முடியாது!! (இறுதிநபித்துவத்தின்கீழே விளக்கப்பட்டுள்ளது)

****

1.05.பிறகு மர்யமின் மகன் ஈஸா இறங்குவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள்! எங்களுக்கு தொழுகை நடத்துங்கள்" என்று கூறுவார். அதற்கு ஈஸா ,"இல்லை. உங்களில் சிலர் தாம் மற்ற சிலருக்கு தலைவராக இருப்பார். இது அல்லாஹ் இந்த சமூதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்" என்று கூறி விடுவார்கள்.(முஸ்லிம் 247 (156))

இந்த ஹதீஸ் தெளிவாக ஈஸா நபி இந்த உம்மத்தில் பிறந்தவர் அல்ல என்பதை காட்டுகிறதோடு உவமை ஈஸா வாதத்தை தூளாக்குகிறது.

***

1.06. மர்யமின் மகன் உங்களிடையே இறங்கி, உங்களிலிருந்தே உங்களை வழிநடத்தினால் எப்படி இருக்கும்? (முஸ்லிம் 246 (155f)) இதன் அர்த்தம் நபிகளாரின் வழிமுறைகளின் படி வழி நடாத்தி இந்த உம்மத்தவராக வாழ்வார். ஆனால் அவர் இந்த உம்மத்தில் பிறக்கவில்லை.

1.07.உங்களைச்சேர்ந்த ஒருவரே உங்களுக்கு இமாமாக இருக்க, மர்யமின் மகன் உங்களிடையே இறங்கினால் எப்படி இருக்கும் (முஸ்லிம் 244 (155d) புகாரி 3449)

இதன்படி தொழுகை நடத்தும் இமாம் இந்த உம்மத்தில் பிறந்தவராக இருக்கும் நிலையில் ஈஸா நபி இறங்குவார்கள். அதன்படியே அந்த இமாம் அவரை தொழுகை நடத்த கூப்பிடுவார். அவர் மறுப்பார்.

***

1.08.விரைவில் மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாக தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியை கொல்வார், ஜிஸ்யா வரியை வாங்க மறுப்பார் (இஸ்லாத்தை மட்டுமே ஏற்க முடியும்), செல்வம் வழிந்தோடும். எந்தளவுக்கென்றால், அதை வாங்கிக்கொள்பவர் எவரும் இருக்க மாட்டார் (புகாரி 3448,2222,2476, முஸ்லிம் 242, 243 (155a,b), திர்மிதீ 2233, இப்னுமாஜா 4078)

இதிலேயும் உவமை ஈஸா வாதத்திற்கு இடமில்லை! ஜிஸ்யாவை வாங்க மறுப்பதுகூட ஈஸா நபி நம் தலைவரின் ஷரீஅத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆகாது. காரணம் நபிகளாரே தம் சங்கையான வாய்மூலம் சொன்னதாகும். இதன்படி நபிகளாரின் ஷரீஅத்திலே ஜிஸ்யா வசூலிக்கும்காலம் ஈஸா நபியின் வருகை வரை செல்லுபடியானது என்பதையே நபிகளார் இதன்மூலம் நமக்கு தெளிவாக்கியுள்ளார்கள்.

***

1.09. எனக்கும் அவருக்கும் இடையே ஒரு நபியும் கிடையாது. அவரே ஈஸா. அவர் இறங்குபவராக இருக்கிறார். அவரை காணும்போது அவரை அறிந்து கொள்ளுங்கள்!. அவர் நடுத்தர உயரமும் சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறம் கொண்டவராகவும் மஞ்சள் நிறம் பூசப்பட்ட இரண்டு ஆடைகளை அணிந்திருப்பார். நனையாமலே அவரது தலை நீர் சொட்டு வது போல இருக்கும்.  இஸ்லாத்திற்காக மக்களோடு யுத்தம் செய்வார். சிலுவையை உடைப்பார். பன்றியை கொல்வார். ஜிஸ்யாவை வாங்க மறுப்பார்.  அவரது காலத்தில் அல்லாஹ் இஸ்லாத்தை தவிர மற்ற அனைத்து மார்க்கங்களையும் அழித்துவிடுவான்.  மஸீஹுத்தஜ்ஜாலை அழிப்பார்  .  நாப்பது வருடங்கள் பூமியில் தங்கியிருப்பார். பிறகு மரணிப்பார். முஸ்லிம்கள் அவருக்காக ஜனாஸா தொழுவார்கள் (அபூதாவூத் 4324 ,ஆங்கிலம் 38:4310)

இங்கே ஈஸா நபி காவிநிறமோ மஞ்சள்நிறமோ அணிந்திருக்க மாட்டார்கள். அத்தகைய மஞ்சள் சாயம் இலேசாக கலந்த ஆடையையே அணிந்திருப்பார். இது தூதரின் வழியை மீறுவதல்ல! (இதைவைத்து பொய்யர் மிர்சா காதியானி, மஞ்சள் நிற ஆடை என்பது தனக்கு இருந்த தலைசுற்றலையும் சிறுநீர்அதிகம் போகும் நீரிழிவு நோயும் ஆகும் என கதைவிட்டிருக்கிறார்.)

 

1.10.தஜ்ஜால் சுருள் முடி கொண்ட இளைஞன் ஆவான்.... உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை போன்றிருப்பான்.... இதற்கிடையே மர்யமின் மகன் ஈஸா அவர்களை அல்லாஹ் அனுப்புவான். அவர் திமிஷ்க் நகரின் வெள்ளை கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அப்போது அவர் குங்குமப்பூ நிற இரு ஆடைகளை அணிந்திருப்பார்.... அவரது மூச்சுக்காற்றை சுவாசிக்கும் எந்த இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்க மாட்டான்... பின்னர் ஈஸா தஜ்ஜாலை தேடிச் செல்வார்கள். இறுதியில் லுத்து எனும் நகரத்தின் வாசலில் அவனை கண்டு, அவனை கொன்றொழிப்பார்கள். .... .(முஸ்லிம் 5629 (2937a) )  ஏழு வருடங்கள் பூமியில் எந்த சண்டையும் இல்லாமல் இருக்கும். அதன் பின்பே இவ்வாறு காற்றை அனுப்பி விசுவாசிகளை மரணிக்கச்செய்வான் (முஸ்லிம் 5635 (2940a))

இதிலேயும் குங்குமநிறச்சாயமிடப்பட்ட ஆடையையே குறிக்கிறது. இது உண்மை ஈஸா தான் வருவார் என்பதற்கு சான்றாகும்.

***

1.11... நீங்கள் வெகுவிரைவில் ஒரு மகத்தான நிகழ்ச்சியை காண்பீர்கள். இறையில்லம் கஃஅபா எரிக்கப்படும். .... அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்: தஜ்ஜால் என் சமூதாயத்தாரிடையே புறப்பட்டு வந்து நாற்பது வரை தங்கியிருப்பான். அப்போது அல்லாஹ், மர்யமின் புதல்வர் ஈஸாவை அனுப்புவான். அவர் உர்வா பின் மஸ்ஊத் அவர்களை போன்றிருப்பார்கள். அவர் தஜ்ஜாலை தேடிவந்து அழிப்பார். .-(முஸ்லிம் 5635 (2940a)

இதே உர்வா இப்னு மஸ்வூத் எனும் நபித்தோழரின் உருவத்திலேயே ஈஸா நபியை மஸ்ஜிதுல் அக்ஸாவில் கண்டார்கள்.  முஸ்லிம் 278 (172)

 

இதுபோன்று இன்னும் நிறைய ஹதீஸ்கள் உள்ளன.

இவற்றின் படி , ஈஸா நபி தான் வருவார் என்றும் அவர் பூமிக்கு வந்து யுத்தம் செய்ய சூழ்ந்திருக்கும் தஜ்ஜாலின் படைகளோடு யுத்தத்திற்கு தலைமை தாங்கி தஜ்ஜாலை கொல்லுவார் என்றும் தஜ்ஜால் என்பவன் இப்னு கத்தன் என்ற அறியாமைக்காலத்தில் வாழ்ந்த அரேபியனின் தோற்றத்திற்கு ஒப்பானவன் என்றும் ஈஸா நபி உர்வா பின் மஸ்ஊத் அவர்களை ஒத்திருப்பார்கள் என்றும் ஈஸா நபி இந்த உம்மத்தைச்சேர்ந்து இந்த உம்மத்தின்படியே நபிகளாரின் சட்டங்களை பின்பற்றுவார் என்றும் இந்த உம்மத்திலுள்ள ஒருவரே தொழுகை நடத்தும் இமாமாக இருப்பார் என்றும் அவருக்கு பின்னால் ஈஸா நபி தொழுவார் என்றும் தஜ்ஜாலின் அழிக்கப்பட்ட பின் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரை அல்லாஹ் அனுப்புவான் என்றும் அவர்கள் சில காலத்தின் பின்னர் ஈஸா நபியின் பிரார்த்தனையின் படி அழிக்கப்படுவார்கள் என்றும் அதன் பின் பூமியில் எந்த பகையுமின்றி மக்கள் ஏழு வருடம் வாழ்வார்கள் என்றும் அதன் பின் குளிர் காற்றை அனுப்பி பூமியிலுள்ள அனைத்து முஃமின்களையும் அல்லாஹ் மரணிக்க செய்வான் என்றும் அதற்கு முன்பே ஈஸா நபி 40 வருடம் (33 வருடத்தில் உலகிலிருந்து சென்று மீழ்வருகையில் 7 வருடம் ஆக மொத்தம் 40) உலகில் தங்கியிருந்து மரணிப்பார் அவருக்காக முஸ்லிம்கள் ஜனாஸா தொழுவார்கள் என்றெல்லாம் தெளிவாக மேலே உள்ள ஹதீஸ்கள் கூறுகின்றன. (ஹதீஸ்களிலே ஈஸாநபியுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்)

***

2.2. இஸ்லாமிய அறிஞர்களிடையே ஈஸா நபியை உயர்த்திக் கொண்ட போது அவருக்கு நடந்த தவஃப்பீ பற்றி நான்கு கருத்துகள் உள்ளன.

1.அவரை உயர்த்த முன் நித்திரை அடையச்செய்தான். இதுவே இமாம் இப்னு கஸீர் போன்ற தஃப்சீர் மேதைகள் (பார்க்க இப்னுகஸீர் 3:55இற்கான விளக்கம்) கூறும் கருத்தாகும்.(ஏனெனில் தூக்கத்திலும் இறைவன் உயிரை கைப்பற்றுவதையும் இவ்வாறே கூறப்படுகிறது -6:60, 39:42 புகாரி 595)

2.அவரை உயர்த்த முன் மரணிக்கச்செய்தான். இது தற்காலிக மரணம். அதாவது தூக்கத்திற்கு இணையானது.

உதாரணமாக ஒரு நல்லடியாரை நூறு வருடம் மரணிக்கச்செய்து உயிர்ப்பித்தான் என குர்ஆன் 2:259  கூறுகிறது., பனீ இஸ்ராயீல்களில் ஆயிரக்கணக்கானோர் மரணத்திற்கு பயந்து ஓடிய போது அவர்களை அல்லாஹ் மரணிக்கச்செய்து பிறகு உயிர்ப்பித்தான் என குர்ஆன் 2:243 கூறுகிறது ., இஸ்ரவேலர்களில் பலர் இறைவனை கண்ணால் காணும்வரை மூஸாவை நம்ப மாட்டோம் என கூறியபோது அவர்கள் இடி முழக்கம் தாக்கி அழிக்கப்பட்டனர். பிறகு மரணத்தின் பின்னர் உயிர்கொடுத்து எழுப்பினான் 2:55-56

அதற்கேற்ற படியே ஈஸா நபியை அல்லாஹ் எழுப்புவான் என்றும் கருத்துப்பட (إذ بعث الله  المسبح ابن مريم), மலக்குகளின் இறக்கைகளில் தம் கைகளை வைத்தவராக இறங்குவார் என முஸ்லிம் 5629 (2937a) கூறுகிறது. அத்தோடு இஸ்லாமிய பரிபாசையில் தூக்கத்தையும் மரணமாகவே நபிகளார் கூறியுள்ளார்கள் அதன்படியே தூங்கும் முன்பும் தூங்கி எழுந்த பின்பும் ஓதும் துஆக்கள் அமைந்துள்ளன (புகாரி 6324)

இதன்படி இதே ஈஸா நபி தான் வருவார்கள் என நம்புகிறார்கள். இதுவே இமாம் மாலிக், இமாம் இப்னு ஹஸ்ம் போன்ற மேதைகளின் கருத்தாகும். (இந்த இமாம்களின் கருத்துக்கள் கீழே கொடுக்கப்படும்.

பொதுவாக பார்த்தால் முதலாம் கருத்துக்கு வெறும் பெயர் மட்டுமே மாற்றமாக உள்ளது. மற்றபடி இரண்டுமே ஒரே கருத்து தான்.! அதாவது இந்த உலகத்திலிருந்து பிரிந்து இருப்பதை மரணமாக கூறுகிறார்கள்.

 

3.முதலாவது உயர்த்திக்கொள்ளப்படுவதும் கடைசி காலத்தில் உயிருள்ளவர் அடையும் மரணத்தை அடைவதையும் குறிக்கும் .  இவ்வாறே இப்னு அப்பாஸ் () , கஅப் () போன்ற ஸஹாபாக்களும் பல தஃப்ஸீர் ஆசிரியர்களும் கூறுகிறார்கள்

4.உயிருடனும் உடலுடனும் மரணமோ தூக்கமோ இல்லாமல் எடுத்தாக்கொள்ளப்பட்டார்கள். இதுவே தபரீ , குர்துபீ போன்ற தஃப்சீர் மேதைகள் கூறும் கருத்தும் அநேக இமாம்களின் கருத்தும்  எமது கருத்துமாக உள்ளது. மூன்றாம் கருத்தும் இதனுடன் ஒத்துப் போகிறது..

ஆக இறுதி காலத்தில் ஈஸா நபி வாழ்ந்து மரணிப்பார் முஸ்லிம்கள் அவருக்காக ஜனாஸா தொழுவார்கள் (அபூதாவூத் 4324) என்று நபிகளார் ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் கூற்றும் தெளிவாக உள்ளது.

ஆகவே புதிதாக ஒரு ஈஸா வருவதற்கு உடலுறவில் கன்னிகழிந்த பெண்ணுக்கு கடைசி மகனாக பிறந்து , புத்திக்குறைபாட்டுடன் வளர்ந்து , தன்னை மர்யமாக ஆக்கியதாகவும் மர்யமான தன் மீது ஈஷாவின் ரூஹ் ஊதப்பட்டதாகவும் அதனால் தானே மர்யமும் மர்யமின் பையன் ஈஸாவுமாக இருப்பதாக வாதிட்டு , தன் பெயரில் புத்தகங்கள் எழுதும் இரு சீடர்கள் தான் ஈஸா நபியுடன் இறங்கும் இரு மலக்குகள் என்றும், ஈஸா நபி அணிந்திருக்கும் இரு மஞ்சள் நிற ஆடைகள் தனக்கிருக்கும் தலைசுற்றல் நீரிழிவு போன்ற இரு நோய்களை குறிக்கிறது என்றும் தான் கொல்லும் தஜ்ஜால் கிறிஸ்தவ கொள்கை என்றும் (அதை இவரது ஐந்தாவது கலீஃபதுல் கஸீஹ் அவர்களால் கூட பிடுங்க முடியவில்லை) தஜ்ஜாலின் வாகனம் புகையிரதம் என்றும் (அதிலே தான் இவரது ஜனாஸாவையே லாஹூரிலிருந்து ஏற்றிவந்தார்கள்) , தாப்பதுல் அர்ள் என்பது பேசாது (பேசும் என்றே எல்லா பிரபல கிராத்களும் கூறுகிறது குர்ஆன் 27:82) மாறாக காயப்படுத்தும் நோய்க்கிருமிகள் என்றும் சூரியன் மேற்கில் உதிப்பது மேற்கில் இஸ்லாம் பரவுவது என உவமை உவமையாக அடித்து விட்டார். இவரை ஏற்றுள்ள முரப்பிமார் இவரை விட அதிகமாக அடித்து விடுகிறார்கள்.

ஆகவே அஹமதிகள் நம்புவது போல் ஈஸா நபி இறுதி மரணத்தை இன்னும் அடையவில்லை .. மாறாக மிர்சா குலாமே இறுதி மரணத்தை அடைந்து அவர் கூறிய தஜ்ஜாலின் வாகனத்திலேயே ஏற்றி அனுப்பப்பட்டார். அதாவது தஜ்ஜாலுடன் பயணம் செய்தார்.

இனி ஈஸா நபி இறுதி மரணத்தை அடைந்துவிட்டார் என்பதாக அஹ்மதிகளால் காட்டப்படும் வசனங்களையும் அதற்கான விளக்கங்களையும் காண்போம்!

Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.