இறுதி நபித்துவம் -முடிவுரை

 

10..இத்தகைய போலி நபித்துவ வாதங்கள் ஏன்?

. தனக்கென்று கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்குவது-

தலைமைத்துவ பண்பு இல்லாதவர்கள் பொய் சொல்வதன் மூலம் இவ்வாறு தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்குவதற்காக நபித்துவத்தை வாதிடுகிறார்கள்.

.தன்னை மற்றவர்களை விட சிறப்பானவர் என்று காட்டுவது-

நான் மற்ற மக்களை விட சிறந்தவன் என்றும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன் என்று மக்களிடம் வாதிடும் ஒரு தந்திரமான முறையே நபித்துவத்தை போலியாக வாதிடுவது.

.உலக ஆதாயம்-

பெண் மற்றும் பொன் ஆகியவற்றை நேரடியாக கேட்டு அடையாமல் அல்லது உழைத்து பெற்றுக்கொள்ளாமல்,  தந்திரமாக அடைந்துகொள்வதற்காக பாவிக்கப்படும் ஒரு முறையே போலி நபித்துவ வாதமும்.

.தன் மூடத்தனமான கருத்துக்களை மக்களிடையே திணிப்பது-

தன் கருத்துக்களை மக்களிடம் நேரடியாக சொன்னால் ஏற்கமாட்டார்கள் என்பதற்காக, தன்னை நபி என கூறி நம்ப வைப்பதன்மூலம் அத்தகைய கருத்துக்களை எதிர்கேள்வியின்றி செயற்படுத்துவதற்காக பொய்யர்கள் பயன்படுத்தும் உத்தியே இந்த நுபுவ்வத் வாதம்!

ஆனால் எம் ஒப்பில்லாத தலைவரோ,

1.நுபுவ்வத் என்றால் என்ன வஹீ என்றால் என்ன என்ற நிலையிலும், தம் முன்னோரில் அறியப்பட்டவர்கள் இவ்வாறு வாதித்ததாக கேள்விப்படாதவராக இருந்தார்- இதன் மூலம் இத்தகைய வாதத்தை வைக்கும் தேவையோ ஆசையோ அவரிடம் இருக்கவில்லை. (புகாரி 7)

ஆனால் போலிகளுக்கோ, ஏனைய நபிமார்கள் உலகத்தில் அடைந்த அந்தஸ்தை அடையும் நோக்கிலே வாதம் வைக்கப்படுகிறது

2.நபிகளார் நுபுவ்வத்தை பெற முன்பே செல்வத்தை பெற்றுவிட்டார்கள். ஆனால் நுபுவ்வத்தை பெற்ற பின் அதை முழுவதும் தர்மம் செய்பவராகவும் (புகாரி 6444, 6445) ,சமைத்து உண்ணும் உணவை நீண்டகாலங்கள் பெறாத அளவு எளிமையாகவும் (புகாரி 6454, 6455, 6457, 6458, 6459), தர்மமாக கொடுக்கப்படுபவற்றை பெறுவது தன்மீதும் தன் குடும்பத்தின்மீதும் ஹராம் என்றும் அறிவித்தார்கள்.(புகாரி 6452).

இறைவணக்கத்திலும் தம் கால்கள் வீங்கும் அளவுக்கு தன் வீட்டிலும் இறைவனை நின்றுவணங்குபவராக (புகாரி 4837), தினமும் எழுபது முறைக்கும் அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புத்தேடி மீளுபவராக (புகாரி 6307) இருந்தார்கள்.

ஆனால் போலி நபித்துவ வாதிகளோ , தமக்கு புத்தகம் எழுதுவதற்கு காசு கேட்டு , அதையும் முறையாக நிறைவேற்றாமல் சமாளிப்போராக இருந்தனர்.

 

3.நபிகளாரின் வருகைக்கு முன்பே அரபுகளிடம் பலதாரமணம் இருந்தது. நபி என்று ஆனதினாலே எந்த திருமண இலாபமும் இருக்கப்போவதில்லை!

ஆனால் போலி நபித்துவவாதிகளோ, திருமணமான பெண்ணை கூட  அவளுக்கு கணவன் இருக்கும்நிலையிலே அல்லாஹ் தனக்கு திருமணம் முடித்து தந்தான் என கூறி பொய் பொய்யாக அடித்துவிட்டனர். ஐயாவின் பொய் உருட்டுக்களை தனியாக கூறப்படும்.

4.நபிகளாரோ எப்போதும் உண்மையாளராகவே இருந்தார்கள். சந்தர்ப்பவாதியாக இருக்கவில்லை! தன் அன்புமகன் இப்ராஹீம் மரணித்த நாளிலே சூரியக்கிரகணம் ஏற்பட்ட போது, "இப்ராஹீமின் மரணித்திற்காக கிரகணம் ஏற்பட்டது" என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால்  எம் தலைவரோ உண்மையாளர் அல்லவா?

யாருடைய பிறப்புக்காகவும் இறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை என்றும் இப்படி கிரகணம் ஏற்படுவதை கண்டால் தொழுகைக்கு வழிகாட்டினார்கள் (புகாரி 1060). இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தவில்லை. காரணம் அவர் உண்மையாளர்.

ஆனால் பொய்யரின் காலத்திலே ரமழான் மாதத்தில் சூரிக்கிரகணமும் சந்திரக்கிரகணமும் ஏற்பட்டது. உடனே "இது நான் மஹ்தி என்பதற்கு ஆதாரம்" என்று அடித்துவிட்டார்.

ஆக முகம்மது நபியின் நுபுவ்வத் நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் போலிகளோ  தெளிவாக மாட்டிக்கொள்கிறார்கள்.

11.ஷரீஅத்தை மாற்றாத நபியின் வருகையும் பிறப்பும்

 

குர்ஆன் நபிகளாரை காதமுன்நபிய்யீன் என்பதன்மூலமாகவும் நபிகளார் தனக்கு பின் நபி இல்லை என்பதன் மூலமாகவும் இஸ்ரவேலரை நபிமார்கள் நிர்வகித்ததாக கூறும் ஹதீஸ் மூலமும் எத்தகைய நபியும் புதிதாக வர முடியாது என மார்க்க ஆதாரம் நிலைபெற்றுவிட்டது.

ஆனாலும் அஹ்மதிகள் பரேல்வீ,தேவப்ந்தீ அல்லது ஹனஃபீ  அறிஞர்களின் விளக்கங்களை சுட்டிக்காட்டி, பார்த்தீர்களா? இந்த இமாமே அப்படி சொல்லியிருக்கிறார் இப்படி செல்லியிருக்கிறார் என்று அடித்துவிடுவார்கள். அவைகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அவர்களின் சரியான புரிதல் என்னவென்று பார்த்தால், அது அஹ்மதிகளுக்கு முரணாகவே இருக்கும். ஆனாலும் அவர்களின் கூற்றுக்களுக்கு நாங்கள் பொறுப்பாளியாகவோ கேள்விகேட்கப்படவோ மாட்டோம். எமக்கான கேள்விகள் குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்தே வர முடியும். இஜ்திஹாதில் பிழைவிட்டவருடைய கூற்றோ அல்லது தவறாக புரிந்துகொண்டவரின் கூற்றோ நமக்கு ஆதாரம் அல்ல!!

ஆக அவ்வாறு கூறப்படும் இரு கூற்றுக்களையும் அதற்கான மறுப்பையும் காண்போம்:

1.காதமுன்நபிய்யீன் என்றால் நபிகளாருக்கு பின் அவரது ஷரீஅத்தை மாற்றக்கூடிய நபி வரமாட்டார் என்பதாகும் என்ற வாசகம்

நம் தெளிவுரையும் மறுப்பும்:

இப்படி கூறியவர்கள் "நான் காதமுன்நபிய்யீன் ஆவேன். எனக்கு பின் நபி இல்லை"  என்றால் முகம்மது நபி,  நபிமார்களில் கடைசியானவர் என்பதை ஏற்றுக்கொண்டதாலேயே "ஷரீஅத்தை மாற்றும் நபி வரமாட்டார்"  என்கின்றனர். காரணம், ஈஸா நபியின் வருகைபற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இருப்பதால், இரண்டையும் இணைத்து அதாவது "முகம்மது நபி கடைசி நபி" + "ஈஸா நபி முகம்மது நபியின் உம்மத்திலே வருவார்" ஆகியவற்றை சேர்த்து முரண்படாமல் விளக்குவதற்காக "முஹம்மது நபி ஷரீஅத்துடைய நபிமார்களில் கடைசியானவர்" என்றும் அவருக்கு பின்னால் ஷரீஅத்தை மாற்றாமல் வரக்கூடிய ஈஸா நபியின் வருகை இருப்பதால், ஷரீஅத்தை மாற்றாத நபி வருவதில் முரண்படாது என்று விளக்கம் கூறியுள்ளார்கள்.

இது  பகுதியளவில் சரியாக இருந்தாலும், இதைவிட மிகவும் நுல்லியமாக நல்லறிமர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். அதாவது ஈஸா நபி முகம்மது நபியிற்கு முன்பே நுபுவ்வத் பெற்றவர். முகம்மது நபி காதமுன்நபிய்யீன்-அவருக்குப்பின் நபி இல்லை என்றால், முகம்மது நபியிற்கு பிறகு எவரும் நுபுவ்வத் பெறமுடியாது என்பதே அர்த்தம் என விளக்கியுள்ளார்கள். (பார்க்க 4.04.தஃபீசீருல்கஷ்ஷாஃப்-ஸமக்ஷரீ, 4.07.அன்வாருத்தன்ஸீல்-பைளாவீ,  4.17.மதாரிகுத்தன்ஸீல்-நஸஃபீ, 4.18.லுபாபுத்தஃவீல்-இப்னுகாஸின், 4.19.பஹ்ருல்முஹீத்-அபூஹய்யான், 4.20.ஙராயிபுல்குர்ஆன்-நைஸாபூரீ ஆகிய 6 தஃப்சீர்களிலும் இவ்விளக்கம் ஸூரதுல்அஹ்ஸாப் 33:40 இன்கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

ஆக ஷரீஅத்தை மாற்றாத நபி வர முடியும் என்பது குழப்பத்திற்குரிய வாசகமாகும்!  சரியான வாசகம்: முகம்மது நபியிற்கு பிறகு எவரும் நுபுவ்வத் பெற முடியாது. எவரும் புதிதாக நபியாக முடியாது என்பதாகும்.

2.நபிகளாரின் ஷரீஅத்தை மாற்றாத அவரது உம்மத்திலே இருக்கக்கூடியவர் நபியாகுதல் காதமுன்நபிய்யீனுக்கு முரண் அல்ல. இதன்படி இந்த உம்மத்தில் பிறந்தவர் நபியாகுவதும் இதற்கு முரண் அல்ல என்ற தவறான வாசகம்.

நம் தெளிவுரையும் மறுப்பும்:

இதுவும் தவறான புரிதலான வாசகமே!

இவர்கள் இவ்வாறு விளக்க காரணம் "நான் காதமுன்நபிய்யீன் ஆவேன் எனக்கு பின் நபியில்லை"+"ஈஸா நபியின் வருகை"+"மூஸா உயிரோடு இருந்தால் என்னை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை"+"ஹிழ்ர்,இத்ரீஸ்,இல்யாஸ் போன்ற நபிமார்கள் நபிகளாரை பின்பற்றுதல் (இதற்கு குர்ஆன்&ஹதீஸில் நேரடி ஆதாரம் இல்லை)"+"(மகனார்) இப்ராஹீம் வாழ்ந்தால் நபியாகியிருப்பார்" ஆகியவற்றை முரண்படாமல் விளக்கும் முயற்சியாக தான். இதற்காக இந்த உம்மத்தில் ஒரு நபி பிறந்தாலும் அவர் ஷரீஅத்தை மாற்றாதவரைக்கும் காதமுன்நபிய்யீனுக்கு முரண்படாது என்று அத்தகையவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

உண்மையில், நபிகளார் தனக்கு பின் நபி இல்லை என்று கூறிவிட்ட பின்பு அதற்கேற்றபடியே நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன் அர்த்தம் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் எவரும் நுபுவ்வத் பெற முடியாது என்பதே ஆகும். ஈஸா நபியோ மூஸாநபியோ ஹிழ்ர்நபியோ இல்யாஸ்நபியோ இத்ரீஸ் நபியோ யாராக இருந்தாலும் அவர்கள் நபிகளாருக்கு முன்பு நுபுவ்வத் பெற்றவர்களாவர். அவர்கள் நபிகளாருக்கு பின்னால் வாழ்ந்தால்கூட முகம்மது நபி நபிமார்களிலா இறுதியானவர் அதாவது இறுதியாக நுபுவ்வத் பெற்றவர் என்பதில் மாற்றம் வராது.

அத்தோடு மகனார் இப்ராஹீம் வாழ்ந்தால் முகம்மது நபி(ஸல்) அவர்கள் காதமுன்நபிய்யீனாக இருக்க மாட்டார்கள் (4.04.கஷ்ஷாஃப்-,ஸமக்சரீ 33:40) என்பதே சரியானதாகும். நபிகளார் காதமுன்நபிய்யீனாக இருப்பதற்காகவே அவருக்கு எந்த மகனையும் பருவ வயதை அடையவில்லை என்பதே இப்னுஅப்பாஸ்() வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (பார்க்க 4.13.மஆலிமுத்தன்ஸீல்-பஙவீ, 4.15.ஸாதுல்மஸீர்-இப்னுல்ஜவ்ஸீ, 4.18.லுபாபுத்தஃவீல் ஆகியவற்றில் குர்ஆன் 33:40இற்கான விளக்கவுரை).

அத்தோடு இப்னுஅபீஅவ்ஃபா என்ற தோழரின் விளக்கமும் இதை உறுதிப்படுத்துகிறது. "நபி (ஸல்) அவர்களுக்கு பின் நபி இருப்பார் என்றால் அவரது மகன் வாழ்ந்திருப்பார். ஆனாலும் அவருக்கு பின் நபி இல்லை"-புகாரி 6194.

ஆகவே நபிகளார் காதமுன்நபிய்யீனாக இருக்கும்வகையிலேயே அவருக்கு நேரடி மகனை பருவவயதை அடைவதற்கு  அல்லாஹ் விதிக்கவில்லை!

ஆக முகம்மது நபியின் ஷரீஅத்தை மாற்றாதவகையில் ஒருவர் நபியாவது காதமுன்நபிய்யீனுக்கு முரணாகாது என்பது பிற்காலத்தவர்களின் தவறான புரிதலாகும்!

நபிகளாருக்கு பிறகு எவரும் நுபுவ்வத்தை பெற முடியாது என்பதே  குர்ஆன் 33:40 மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் நேரடி விளக்கமாகும்.

ஆகவே மேற்கூரிய இரண்டு கருத்துக்களும் தவறுள்ளவைகளாகும். அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம்!!

12.காதம் பற்றி அகமதிய உருட்டுக்கள்

நபிகளார் தன்னை குறித்து காதமுன்நபிய்யீன் என்று சொன்னது எனக்கு பின் நபி இல்லை என்பதாகும்.(திர்மிதீ 2219)

ஆனாலும் அலீசீனாவை காதமுல்அதிப்பாஉ (خاتم الأطباء)-மறுத்துவர்களின் முத்திரை, அபூதம்மாம்தாயீயை காதமுஷ்ஷுஅரா (خاتم الشعراء)-கவிஞர்களின் முத்திரை, இதேபோல் வேறு நபர்களை காதமுல்முஹத்திஸீன்,காதமுல்முஃபஸ்ஸிரீன், காதமுல்முஹக்கிகீன்,காதிமதுல்முஜ்தஹிதீன் என்றெல்லாம் அறிஞர்கள் மக்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை காட்டி, காதமுன்நபிய்யீன் என்றாலும் இதுபோன்று தான் எடுக்க வேண்டும் என்று வாதம் வைக்கிறார்கள்.

பேச்சுவழக்கில் மக்கள் தம்மால்  ஒப்பில்லாமல் மதிக்கப்படுபவர்களை காதம் என்று அழைப்பதால் காதமுன்நபிய்யீனுக்கு அர்த்தமோ அல்லது காதம் என்ற சொல்லின் அர்த்தமோ மாறிவிடுவதில்லை! 

காரணம் ஒரு மொழியிலே சில சொற்களின் பாவணைகள் காலத்திற்கு காலம் மக்களால் வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தும் வழமை எல்லா மொழியிலும் உள்ளதொன்றே.

ஆனால் இதை காதமுன்நபிய்யீன் என்பதுடனோ அல்லது காதம் பற்றிய அகராதிகளின் அர்த்தம் என்பதுடனோ குழப்பிக்கொள்ள முடியாது.

நபிகளார், தன்னை காதமுன்நபிய்யீன் என்பதனால் நாடப்படும் அர்த்தத்தை விளக்கியுள்ளார்கள் (திர்மிதீ 2219). அத்தோடு மொழியியல் அறிஞர்கள் காதம் என்பதன் அர்த்தம் குறித்து கூறியதையும் நானும் 6.1-6.6 இலே குறிப்பிட்டுள்ளேன்.

அத்தோடு அல்காதிம் (அல்காதம் அல்ல)என்பதை குறித்து அஹ்சன் என்றும் சில அறிஞர்கள் (உதாரணமாக உம்ததுல்காரீயில் புகாரி 3535இற்கான விளக்கம்) குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நபிகளாரோ, அதற்கும் கடைசி என்பதையே புகாரி 3535 ஹதீஸிலே விளக்கி காட்டியுள்ளார்கள்.  அதையும் ஹதீஸ்களின் கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.

எது எப்படி இருந்தாலும் அஹ்மதிகளுக்கு இவற்றை வாதமாக வைக்கவே முடியாது. காரணம், பொய்யர் மிர்சா காதியானி காதம் என்பதற்கு இறுதி என்பதையே விளக்கமாக கூறியுள்ளார். அதை 8.1 முதல் விளக்கியுள்ளேன்.

ஆகவே இந்த தந்திரமான வாதங்கள் செல்லுபடியாகாது!!!

13.எந்த பிரயோசனமும் இல்லாத பயனற்ற போலி நபிமார்கள்:

 

.மார்க்கம் பூர்த்தியாக்கப்பட்டுவிட்டது. அருட்கொடைகளும் முழுமையடைந்துவிட்டது.(குர்ஆன் 5:3). பூர்த்தியாக்கப்பட்ட மார்க்கத்திலே இவர்கள் எதை கிழித்துவிட போகிறார்கள்?

.நபிகளார் தன் தூதை எத்திவைத்துவிட்டார்கள். இறைவனிடமிருந்து வந்ததை முழுமையாக எத்திவைத்த பின்னர், இறைவனிடமிருந்து மார்க்கத்தில் எத்திவைப்பதற்கு  இந்த பொய்யர்களுக்கு என்ன எஞ்சியிருக்கிறது?

.எல்லோரும் நபிகளாரையே பின்பற்ற வேண்டும் (குர்ஆன் 3:31).  அப்படியிருக்க ஏன் தேவையில்லாமல் இன்னொரு நபி புதிதாக வரவேண்டும்?

மாறாக தமக்கென்று மக்களிடையே புகழையும் செல்வத்தையும் ஈட்டிக்கொள்வதற்காகவே இத்தகையோர் வாதிடுகிறார்கள்!

14.இறுதி நபித்துவம் முடிவுரை-இறுதி நபித்துவம் என்றாலே சிறப்பானதா?

 

குர்ஆனும் ஹதீஸ்களும் முஃபஸ்ஸிர்களும்,இமாம்களும் இறுதி நபித்துவத்திலே ஒருமித்திருப்பதையே காணமுடிகிறது. இஸ்லாமிய வரலாற்றில் பொய்யர்களையும் தவறிழைத்தவர்களையும் தவிர வேறு யாரும் இதிலே கருத்துவேறுபாடு கொள்ளவில்லை.

மிர்சாகாதியானி கூட இறுதிநபித்துவத்தை ஏற்றவராக இருக்கிறார். அதனாலேயே தன்னை நபியாக வாதம் வைப்பதற்கு தன்னையும் முகம்மது நபி என்றே வாதிக்கிறார்.

சிலபோது அஹமதிகள் நம்மிடம் கேட்கிறார்கள்:  நபிமார்களில் இறுதியானவர் என்பது சிறப்பா?  ஒரு போட்டியில் கடைசி வருவது சிறப்பு அல்லவே. அதனால் காதமுன்நபிய்யீன் என்றால் நபிமார்களில் சிறந்தவர் என்பது தானே பொறுத்தமாக இருக்கும்?

நம் பதில்:

ஒரு போட்டியில் கடைசியாக வருவது சிறப்பு அல்ல! ஆனால் நபிமார்களில் கடைசியாக வருவது என்பது அவர் மூலமாகவே முழுமை அடைகிறது பூரணப்படுகிறது என்ற சிறப்பே காணப்படுகிறது.

 இதை புகாரி 3535 ஹதீஸிலே நபிகளார் தன்னையும் ஏனைய நபிமார்களையும் ஒரு மனிதன் கட்டிய அழகான வீட்டிலே  ஒரு மூலையில்  ஒரே ஒரு கல் விடப்பட்டிருப்பதற்கு உதாரணம் என கூறிவிட்டு , நானே அந்த கல் என்றும் நானே காதிமுன்நபிய்யீன் (நபிமார்களை முத்திரையிட்டவர்/முடித்துவைத்தவர் அதாவது இறுதியானவர்) ஆவேன் என முடிக்கிறார்கள். (பார்க்க 2.3)

அனைத்து நபிமார்களினதும் ஷரீஅத் அவரவர் காலத்திலே பரிபூரணமாக இருந்தாலும், இறுதிக்காலம்வரை பரிபூரணமாக இருக்கப்போவது நபிகளாரின் ஷரீஅத் மட்டுமே!! இப்படி நபிமார்களிலே இறுதியாக வருபவர் என்பது மிக மிக சிறப்புக்குரியதும் நுபுவ்வத்தையே முழுமைப்படுத்துவதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்வான அந்தஸ்துடையவர் என்பதையுமே பரைசாற்றுகிறது!

ஆகவே என் ஒப்பற்ற தலைவர் நபிமார்களின் வருகையையும் நபிமார்களையும் முத்திரையிட்டவர் முழுமைப்படுத்தி முடித்தவர், இறுதியானவர். அவருக்கு பிறகு எந்த நபியும் இல்லை!!

Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.